Saturday, July 16, 2011

கர்ம வீரர்


மனதில் மலர்ந்திட்ட மலர்களை
கவிமாலையாக்கி காணிக்கையாக்குகின்றேன்
கர்ம வீரனின் கமலபாதங்களிலே

தமிழகத்தின் வரலாற்றில் ஒரு முத்திரைச்சொல்
கர்ம வீரன்-ஒரு
கறுப்பு மனிதன் கர்மவீரன் ஆனகதை கேளுங்கள்
காமராசரே,நீர் பிறக்குமுன்பே விருது
கிடைத்து விட்டதே,உந்தன் மண்ணுக்கு!
நீ அங்கே அவதரிக்கப் போவதை
அறிந்தா?அல்லது அறிவிக்கவா?

இராசாசியின் எழுத்து,
அண்ணாவின் பேச்சு,
அம்மையின்ஆங்கில வளம்
கலைஞரின் தமிழ்ப்புலமை
இத்திறம் ஏதும் இல்லாது
எத்திறத்தில் நீ வென்றாய்?
காலங் கடந்து நின்றாய்?

மணம் புரிந்திடவில்லை-மக்களின்
மனம் புரிந்ந்திட்டாய்
மதிய உணவு தந்தாய்
மகத்தான தலைவனானாய்-மாணவரின்
கல்விக் கண்ணைத் திறந்தாய்
காலங்கடந்து நின்றாய்
அணுவிஞ்ஞானியின் ஆற்றலும்
பாரிஸ்டரின் பண்பு நலனும் கொண்ட
கறுப்பு காந்தியே,
பாரதம் போற்றும் தலைவனே,
சாதனை நாயகன் உன்னைச் சிலர்
சாதிச் சிறையில் அடைத்திட்டாலும்
மழைத்துளி பருகிய சக்கரவாகம் நீ
மக்களின் தலைவனல்லவா?

சிவகாமி மகனிடம் சேதி சொல்லச் சொல்லி
கவியரசு சொன்னவை
கொட்டிலிலே தோன்றிக் குவலயத்தில் பேரெடுத்து
இட்டமுடன் சேர்ந்தோர்க்கு இறைவனாய் தோற்றமுற்ற
ஏசுபிரான் மேற்றிசையில்!
இளைப்பிரான் கீழ்த்திசையில்!
சத்தியமே தெய்வம் சமத்துவமே வாழ்க்கையென
இத்தரையில் ஓர் நாள் இளவரசாய் வந்துதித்த
புத்தபிரான் நேபாளம்!புனித பிரான் விருதுநகர்!

மென்மையான தலைவனின் மேன்மை உரைக்க
இதைவிடச் சான்றும் வேண்டுமோ?
                                                                                        (மீள் பதிவு)

Wednesday, July 13, 2011

இணையம்

                                                  யாதும் ஊரே,யாவரும் கேளிர்
                                                  இது,
                                                  வெற்றுச்சொல்-இணையத்தினாலே
                                                   வெற்றிச் சொல்.
                                               யாதும் ஊரே,யாவரும் கேளிர்
                                                இது வெறும்
                                               வார்த்தை-இணையத்தினாலே
                                               இது,வாழ்க்கை.
                                            
                                               உலகியல் தந்திடா நிறைவை
                                               உலவிகள் தந்திடுது.
                                               பழகப் பழகப் புளிக்கிறது
                                               பக்கத்திலிருக்கும் நட்பு
                                               பார்க்காமல் பேசுவது கூடப்
                                               பிடிக்கிறது,பண்பான நட்பு!
                                    

                                                பிரபஞ்சம் கைக்குள் அடக்கம்
                                                பிரச்சனையும் கணினிக்குள்
                                                அடக்கம்,எதில் இல்லை?
                                           அஞ்சல் தலையில்லை
                                           முத்திரையில்லை,

                                          அடுத்த நொடியில் கடிதம்
                                          அகிலயெல்லையில்!
                                          முகப் புத்தகம் எத்துணை
                                           அகம் காட்டுகிறது!
                                              வலைப்பூவுக்குள் எத்துணை
                                              வாழ்க்கை வழிகள்?
                                              வலையில் விழ,விழ
                                              வாழ்வின் எல்லைகள்
                                              விரிகிறது........
                                              இவையெல்லாம் இணையம்
                                              தந்திடும் இமயவசதிகள்

                                             கணினி செய்யும் விந்தை?
                                             கணக்கிலடங்காது
                                             இணையத்தின் இதயம்
                                             கணினி,
                                             கணினியின் கால்கள்
                                             இணையம்.
                                            இணைய இணைப்புக் கொடுத்து
                                            விட்டால்,
                                            இகத்தின் வாசல்கள் திறக்கிறது.
பழைய  பதிவு

Monday, July 11, 2011

அரசியல் அல்ல.....ஆனால்?

                                         எத்தனை  நாள்  இணைப்புப் பயிற்சி  கொடுப்பது?அந்தோ பரிதாபம்...அறியாப்  பிள்ளைகளில்லை,ஆசிரியப்  பெருமக்கள்.என்ன  செய்வது?
பத்துப்  பக்கங்களை  வைத்துக்  கொண்டு  பதினைந்து  நாள்  ஓட்டியாயிற்று.
                                                              இன்னும்  எத்தனை  நாட்களோ?தெரியவில்லை.
வாய்த்ததொரு  வாய்ப்பு  என்று  எண்ணிக்  கொண்டு  தமிழ் இணையம் அறிமுகம்  என்று  பாடக் குறிப்பில்  எழுதி விட்டு  வலைப்பூக்கள்  குறித்தும்,தேடு பொறிகள்  மூலமாக  நாம்  ஏற்கனவே   தரவிறக்கி  வைத்துள்ள   இலக்கிய  நூல்கள்  குறித்தும்  மாணவியர்க்கு  அறிமுகம்  செய்யலாம்  என்று  கணினி  அறைக்கு  அவர்களை   அழைத்துச்  சென்றால்  இணையப் பயன்பாடு  கடவுச் சொல் போட்டுப் பூட்டப் பட்டிருக்கிறது.
                                                       அலுவலக  வேலைக்காகப்  பயன்படுத்தப் படும்  அந்தக்  கணினியில்  இராணுவ ரகசியம் ஏதுமில்லை.அதைப் பயன்படுத்தும்  ஆசிரியரிடம்  நீங்களே   கடவுச்  சொல்லைப்  பயன்படுத்தித் திறந்த பின் பிள்ளைகளுக்கு  அதிக பட்சமாக ,பத்து  நிமிடம்  இணையம்  குறித்து  சொல்கிறேன்  என்றேன்.அனுமதி   மறுக்கப் பட்டது.
                                                     அரியலூர்  மாவட்டத்தில்  நடுநிலைப் பள்ளியில்  6,7  வகுப்பு  மாணவர்கள்  விக்கிபீடியாவில்  கட்டுரை  எழுதுகிறார்களாம்.பத்தாம்  வகுப்புப் பிள்ளைகள்  பாவம்  குறிப்பேட்டிலேயே  எழுதிக்  கொள்ளட்டும்  கட்டுரைகளை.காட்சிப்  பொருளாக  இருக்கும்  கணினியை  பயன்பாட்டில்  கொண்டு  வர  வாய்ப்புண்டா?
                                                          நமது  உபயோகத்திற்கு   வீட்டில்  இணைய இணைப்பு  உள்ளது.பள்ளியில்  நமது  சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்தப் போவதில்லை..சென்ற  ஆண்டு  இணைய மாநாட்டின் போது  நடந்த  வரைகலைப் போட்டிக்கான  பதிவை  வீட்டில்தான்  செய்தேன்.நாளொரு நூல்  குழுமத்தில் இருந்து  பெறும்  குறிப்பு  கொண்டு  கட்டுரைகள்  தயாரிக்க  உதவுகிறேன்.இதை  நாம்  செய்தாலும்,மாணவியர்க்கு  பள்ளியில் தானே  காண்பிக்க முடியும்?அரசுப் பள்ளியில்  ....?