எண்ணற்ற பறவைக் கூட்டம்
விண்ணிலே சிறகடித்தாலும்
கண்ணைக் கவரும் பறவை,என்றவுடன்
பண்ணென மனதில் மலர்வது
நம் தேசியப் பறவை!
பகிர்ந்துண்ணும் பண்பினை
பாரோருக்கு உணர்த்துகிறாய்-ஆனால்
பார்வைக்கு நீ?
ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவு
காத்திருக்கும் தன்மைக்கு
காட்டு-ஆனால்
உன் நீண்ட கழுத்தும்,
நெடிய கால்களும்!
அசைந்தசைந்து நடக்கும் உன்னழகு
அசத்துவதாய் இருந்தாலும்
ஆர்டிக்கில் இருப்பதனால் காட்சிக்கே
அரிதாகிப் போகின்றாயே!
உந்தன் குரலினிமையிலே குழைந்து
கரைந்தானே எந்தன் பாரதி!பண்ணால்
கரைத்தாலும் கண்கவரவில்லையே நீ?
உன் பச்சை நிறம்
பரவசமூட்டலாம்
கொவ்வை அலகும்
அழகாயிருக்கலாம்
கான மழையே கவராத போது
உன் பேச்சு?
பருந்தோ,கருடனோ
பட்டியல் நீளமாயிருப்பினும்
பரவசத்தில் ஆழ்த்துவது
பாங்கான மயிலின் நடனம்
ஆம்,உந்தன் நீலவண்ணம்
நினைவில் நிற்கிறதென்றால்
அதனோடு கலந்த மிதமான
பசுமையும் பரவசமூட்டுகிறது,
தோகை விரித்தாடும்-உன்
நடனம் அற்புதமென்றால்
உதிர்ந்த பிறகும் கூட
உன்னதம் பெறுகிறதே-ஆம்
அரச கிரீடத்தில் அலங்காரமாய்,
அழகின் வாகனமே,நீ
அங்கீகாரம் பெற்றதிதனாலோ?
No comments:
Post a Comment