துணையது வாய்வருந்தூய நற்சோதி
துணையது வாய்வருந்தூய நற்சொல்லாந்
துணையது வாய்வருந்தூய நற்கந்தம்
துணையது வாய்வருந்தூய நற்கல்வியே-
திருமந்திரம் தனைச் சொல்லி
தூய நற்கவிதை சொல்லிடுவோம்.
எம் பள்ளி தமிழாசிரியர் சந்திரா
அவர்களுக்கு,
தேய்ந்து வளரும் தன்மை
வான் நிலவுக்கு உண்டு
தமிழ் நிலவே,
தேய்வென்பதே இல்லை எனும்போது
ஓய்வென்பது எதற்கு?ஆம்
உந்தன் பணிக்கல்ல ஓய்வு,
அகவையின் அதிகத்தால் மட்டுமே.
விடுப்பை வீண் செய்ய விரும்புவோமா?
விருப்பத்தோடு விடுப்பைக் கூட
வீணாக்கியவருக்குக் காலம் மட்டுமே
கொடுக்கிறது கட்டாய ஓய்வு!
என்றைக்கோ படித்த மாணவியும்
இன்றைக்கும் ஓடிவருவாள்
அம்மாவென்று!(தமிழ்ப் பரிசு)
அவர்களுக்கு மட்டுமல்ல
இங்குள்ளோர் அத்துணை பேருக்கும்
அம்மா,அன்பான அம்மா!
பண்பான அம்மா!
நட்பிற்கோர் நல்லிலக்கணம்
வகுத்து விட்டுச் செல்கின்றீர்-இது
குழு நடவடிக்கையாய்க் கூட
இருந்து விட்டுப் போகட்டுமே-அதனால்
குழப்பமென்ன?
அன்பு பகிரும் அகங்கள்
குழுமிக் குதூகலித்தல்
இயல்பு தானே?
அருமையாய்ப் பணி செய்தீர்
ஆற்றலோடு பணி செய்தீர்
இன்பமொடு பணி புரிந்தீர்
ஈகையொடு நலம் செய்தீர்
உவகையொடு பணி செய்தீர்
- ஊக்கமொடு பணி புரிந்தீர்
எந்நாளும் பணி செய்தீர்
ஏற்றமொடு பணி செய்தீர்
ஐயம் நீக்கும் தொழில் செய்தீர்
ஒற்றுமையோடு இயைந்து
ஓங்கிய வாழ்வு நீவிர் பெற
ஔடதமில்லா வாழ்வு பெற்று
உயர் வாழ்வு வாழ
இறையின் பேராலே
வாழ்த்துகிறோம்!
2 comments:
சூப்பர்..
நன்றி சௌந்தர்!
Post a Comment