Saturday, October 9, 2010

வாழ்வின் வஞ்சம்




முதல்  பாட வேளை.தமிழ்  வகுப்பு.''அன்ன  யாவினும்  புண்ணியம்  கோடி ,ஆங்கோர்  ஏழைக்கு  எழுத்தறிவித்தல்''.நேற்றைக்கு  கரும்பலகையில்  எழுதியது  இன்னும்  அழிக்கப் படாமலேயே  இருந்த்து.எட்டாம்  வகுப்பில்  நுழைந்த  ஆசிரியை  மகேஸ்வரி மாணவர்களின்  பெயர்ப்பட்டியலை  வாசித்து வருகையினைப்  பதிவு  செய்தார்.
                                                நசீர் அகமது  இன்றைக்கும்  வரவில்லை.ஆசிரியை  குமரனை  நோக்கி , ''குமரா! நீ  நசீரின்  பக்கத்து  வீட்டில் தானே  இருக்கே.அவன் வராத்தற்கான  காரணம்  தெரியாதா?ஒரு வாரமாச்சே  அவன்  வந்து.ஏனென்று காரணம்  தெரிந்து  கொண்டு  வா'' என்று  சொல்லி விட்டு  பாடத்தை ஆரம்பித்தார்.
                                            பாடத்தை  முடித்து விட்டு  ஆசிரியர்களின்  ஓய்வறைக்கு
வந்த மகேஸ்வரி  புஷ்பா  டீச்சரைப்  பார்த்துச்  சொன்னார் ,''எட்டாம்  வகுப்பில் இருக்கும்  நசீர்  ஒரு  வாரமா  வரலை.நீங்களும் அந்த  வகுப்பில் கணிதம்  எடுக்கறீங்க.உங்களுக்கும்  தெரிந்திருக்கும்.ஏனென்றால் அவன் மிக நன்றாகப் படிக்கும்  மாணவனாயிற்றே.புஷ்பா ,''ஆமா,நானும்  கவனித்தேன்.காரணம் தெரியலே.உடம்பு சரியில்லையோ  என்னவோ?என்றார்கள்.
                                                        மகேஸ்வரிக்கு  அவனுக்கு  என்னவாகியிருக்குமோ?ஏன்  வரவில்லை? என்ற  எண்ணமே  மேலோங்கியிருந்த்து.அடுத்த நாள்  வகுப்பினுள் நுழைந்தவுடனே  குமரனைப்  பார்த்து,''என்ன  குமரா?நசீரைப்  பார்த்து விட்டு வந்தாயா?என்ன சொன்னான் ,உடம்பு  சரியில்லையா? என்று   கேட்டார். ''இனி மேல்  அவன்  வரமாட்டானாம்.தோல் தொழிற் சாலைக்கு வேலைக்குப் போகிறானாம்''என்றான் குமரன்.அவன் சொன்ன  பதிலால்  வருத்தமுற்று ,''நாளை  அவனைக்  கண்டிப்பாக  பெற்றோருடன்  வரச் சொல் ''என்றார்  குமரனை நோக்கி.
                                                         மறுநாள்  மூன்றாவது  பாடவேளையின் போது  ஏழாம் வகுப்பில்  தமிழ்  எடுத்துக் கொண்டிருந்தார் மகேஸ்வரி.குமரன்  நடுத்தர வயதுப் பெண் ஒருவருடன்  வந்து  கொண்டிருந்தான்.''டீச்சர் ,இவங்க  நசீரின்  அம்மா''என்றான்  குமரன. சொல்லி விட்டு  அவன் தன்  வகுப்பறை  நோக்கி  ஓடினான்.
                                                        மகேஸ்வரி  நசீரின்  அம்மாவைப்  பார்த்து  பள்ளியில்  புத்தகமும்,கட்டணமும்  இலவசம்.சீருடை,பேனா,பென்சிலுக்கான  செலவுகளை  நாங்கள்  ஏற்றுக் கொள்கிறோம்.நீங்கள்  அவனைப்  பள்ளிக்கு  அனுப்புங்கள்  என்றார். உடனே  நசீரின் அம்மா ''இவன் வாப்பா எங்களை  விட்டுவிட்டுப்  போய் விட்டார்.வீட்டில்  நாலு  ஜீவன்கள்  இருக்கோம்.வீட்டுச் செலவுக்கு என்னம்மா  செய்வது? இந்தக் கேள்விக்கு மகேஸ்வரியிடம்  விடையில்லை.
                                                                மாலை  பள்ளி  விட்டதும்  வீடு  செல்வதற்காக  வழக்கமாக  வரும்  ஆட்டோ  பள்ளி  வாயிலின்  முன்  வந்து  நின்றது.இத்தனை  நாளும்  கவனித்துப் பார்த்த்தில்லை.இன்று  கண்ணில் பட்ட  அந்த  வாசகம்  மனதில்  வலியை  ஏற்படுத்தியது. ''குழந்தைத் தொழிலை  அனுமதியோம் ''.

Tuesday, October 5, 2010

தமிழே

                                    தரணியெல்லாம்  உன்  புகழ்க்கொடி
                                    தரம்   உயர்ந்து   பறந்திட வேண்டும்
                                   தன்னிகரில்லா   கவிஞர்களாலே
                                   தனித்துவம்  நாளும்   அடைந்திட
                                   வேண்டும்!

                                   உலகினுக்கே  பொதுமறை  தந்த
                                   உயர்ந்த   தமிழே!
                                   உன்னாலே  எங்களிடம்  என்றும்
                                   உன்னதம்   தங்கிடுமே !

                                  கன்னித் தமிழ்    இன்று
                                  கணினித்   தமிழுமாய் !
                                  இணையம்  எம்மொழியாலும்
                                  இணையட்டும்
                                  இன்னமுத மொழி    எம்
                                   இயக்கமாய்   இருந்திட
                                  வேண்டும் !

                                  தமிழிலே  கையெழுத்து
                                  தலையெழுத்தே  தமிழெழுத்தாய்!
                                  சுருக்கொப்பம்  இடுவதும் -எம்
                                  விருப்பொப்பமாய் !

Saturday, October 2, 2010

தேடல்

                        பட்டியிலிருந்து  வந்து
                        பட்டணம்    சேர்ந்து
                        பட்டம்    பெற்றிட
                       பலப்பலத்   தேடல்

                       சகல    வசதிகளோடும்
                       சந்தோஷப்  பொழுதுகளோடும்
                        சான்றிதழ்    பெற்றிடவே
                        சிலப்பல    தேடல்கள் -பின்

                        தேடித் தேடி  அலுத்த  வேலை
                        திடீரென   வந்த்து -பலப்பல
                       திங்களும்  பார்த்திட்ட  பின்னே

                       வாராதிருந்தாலும்   கூட
                       வாடாதிருந்திருக்கலாமோ?

                        வந்த     வேலையினால்
                        சிந்தை   நொந்துவிட்டது
                        தொடர்கின்றது    தேடல்......

Friday, October 1, 2010

அகத் தூய்மை

சூத்திரங்களால்   மனதைச்
சுத்தப்படுத்தி விட  முடியாது

அறிவியல்  ஆய்வினால்
அகத்தை  அழகாக்க முடியாது

அறிவை  மேம்படுத்த  இவை
யாவும்   அவசியமே!

அகத்தை  மேம்படுத்த
அழகாய்ச்  சமைத்த
அற்புதக்  கவிதைகளும்
அறத்தை  வலியுறுத்தும்
ஆன்மீக  கதைகளுமே
அவசியத்  தேவை ,மட்டுமல்ல
அத்தியாவசியத் தேவையுமே .

Thursday, September 30, 2010

வல்லரசா?நல்லரசா?

வாழ்க்கை  ஒரு  வாய்ப்பு  -அது
நேசமெனும்  ரோஜாக்கள்  பூக்கும்  பூமி
வாழ்க்கை  ஒரு  வரம் -அது
பாசமெனும்  தென்றல்  தவழும்  பூந்தோட்டம்
அதில்,
அடிமைத்தளை  என்பது  அரக்கத்தனம்
அல்ல்லுறுத்துவது  என்பது  அசுரத்தனம்
அரக்கத்தனத்தை  அழித்தோம்
அந்நியராட்சி  அகற்றினோம்
தென்றல்  தவழும்  பூந்தோட்டத்தில்
ரோஜாவின்  மணம்  கமழ்ந்த்து
நாசி  முழுவதும்  நறுமணம்
சுவாசம்  முழுவதும்  இனிய வாசம்
நுகர்ந்த  வாசத்தை  அனுபவிக்கு முன்னே
அடுக்கடுக்காய்  துர் வாசனை,

சாதிச்  சண்டையாய்,
சமயப்  பூசலாய்,
இன வெறியாய்,

அன்பு  எப்போது  தழைக்கும்?
அகிலம் என்றைக்கு  சிறக்கும்?
துன்பம்  எப்போது  கரையும்?
இன்பம்  என்றைக்கு  வளரும்?

தழைக்கும்  ,சிறக்கும்
மலரும்  ,வளரும்
நேர்மையாலே ,மன ஓர்மையாலே,
அன்பாலே,நல்ல  பண்பாலே.

அன்பு    மலர்த்தி
ஆற்றல்  பெருக்கி
இன்பம்   நிறைத்து
ஈகையோடிருந்தால்
யாவும்  கைகூடும்
ஆன்மீக பூமி  என
அகிலம்  முழுவதிலும்
அறியப்படும்  நம்
அன்னை  பூமி
வல்லரசாக  வேண்டாமா?
வேண்டும் !முதலில்
நல்லரசாக  மலரட்டும்
'வல்லரசு' தானே  உருவாகும்.

Monday, September 13, 2010

ஆட்சி மொழியில் தமிழ்

                       அமுதே  தமிழே, அழகிய  மொழியே
                       எனதுயிரே,சுகம்  தரும்  கவிதைகள்  தா!

                      அன்னையே!தமிழன்னையே ,
                      ஆட்சி  பீடத்தில்  அமர்ந்திட்டு
                      ஆண்டுகள்  ஐம்பது  கண்டாய்
                       ஆற்றல்  தந்து   நின்றாய்!

                      சுந்தரத் தமிழே உனை   வணங்குகிறேன்
                     சுவையோடு சுகமாய்  என்னுள் வாழ்ந்திடு!
                     தரம்  நிறை  தமிழே!தண்டமிழ்க் கவியாகும்
                    வரம்  எனக்குத் தந்திடு!சிரம் தாழ்த்துகின்றேன்!

                    ஆட்சியில்  அமர்ந்தே  ஐம்பதாண்டுகள்-உந்தன்
                    ஆதியோ  ஆயிரமாயிரம்  ஆண்டுகள் !!
                    வாழ்த்த  வார்த்தை இல்லை ,வணங்கிப்  பா
                    பாடுகின்றேன் !வணங்கா முடி  உனக்கு.

Sunday, August 29, 2010

நல்ல நாள்

                                          ஆன்மீக  வாழ்வு  தன்னில்
                                          ஆனந்தித்திருக்கும்  நாள்
                                          எல்லாம்  நல்ல  நாளே!

                                          இயற்கையோடு   இயைந்து
                                          இன்புற்றிருக்கும்   நாள்
                                          எல்லாம்  நல்ல  நாளே!

                                          அன்பு     கெழுமிய  வாழ்வு தனில்
                                          அக்கறை  கொள்ளும்   நாள்
                                          எல்லாம்  நல்ல  நாளே!

                                          எல்லையற்று  விரிந்த உலகில்
                                          எல்லாமாய் இருப்பதனை  வணங்கும்
                                          நாள்
                                          எல்லாம்   நல்ல  நாளே!

                                          அஷ்டமியாலும்   அசையாது
                                          நவமியாலும்    நலியாது
                                          நாளெல்லாம்  நலம் காண
                                          நம்பிடுவோம்  இறைநிலையை
                                         நாடிடுவோம்  நல்லறத்தை!

                                         எண்கள்  நமது   கண்களாமே!
                                         இருந்தாலென்ன?
                                         இராகு,கேது  கிரக  நிலை
                                         வந்தாலென்ன?

                                          இயற்கையின்  சுழற்சியில்
                                         எல்லாமே   இருந்திடுமே,
                                         இறை நிலை  பற்றுவோம்,
                                         இழி நிலை     அகற்றுவோம்!
                                     

Saturday, August 28, 2010

இனியொரு விதி செய்வோம்

                                  இனியொரு  விதி  செய்வோம்
                                  அதை  எந்நாளும்  காப்போம்  என்று
                                 பாரதி  பகர்ந்து  பன்னெடுங்காலமாயிற்று
                                 காத்தோமா?அல்லது
                                 நாமேனும்  ஓர்  விதி  செய்வோமா?
                                 செய்த  பின்பு   அது  காக்க-இன்னும்
                                 நெடுங்காலம்   ஆகிப்போகுமா?
                                  அதனால்,
                                 கனவு  காணச்  சொன்ன -நம்
                                 கனவான்  கலாம்  வழியில்-நாம்
                                 கற்பனைச்  சிறகும்  சேர்த்துக்  கட்டிக்
                                                                                  கொள்வோம்
                                சண்டையில்லாத   பிரபஞ்சம்
                               சந்தோஷமே  நிறைந்த  பிரபஞ்சம்

                              அணுகுண்டு  ஒலியில்லா  அகிலம்
                              அமைதிப் புறா  பறக்கும்  அகிலம்

                             உலுத்தர்கள்   இல்லாத   உலகு
                             உன்மத்தர்கள்  நிறைந்த  உலகு

                            கவலைகள்  கரைந்து போன காசினி
                            களிப்பே  நிறைந்திருக்கும்  காசினி

                           கண்டங்களாய்  நாம்  பிரித்து  வைத்தன
                          துண்டங்களாய்  மாறி  விடாது,
                          அன்பு  நிறைந்த  அகண்டமாய்
                          ஆகி  விடாதோ?
                     

                       

Thursday, August 26, 2010

அன்பென்று கொட்டு முரசே!

                                          சொன்னானே  பாரதி  அன்றே
                                          சிந்து ந்தி  சேர்க்கச்  சொல்லி
                                          துயர்   தீர்க்கச்  சொல்லி!

                                         கிருஷ்ண,  கிருஷ்ணா!
                                         ஆற்று  நீரிலும்  அரசியல்,
                                         கொட்டினால்  கிட்டுமா? அன்பு

                                        முக்கண்ணன்  தரிசனத்தில்
                                        முக்தியடைந்தோர்  பதின்மூவர்
                                         முரசமிட்டால்  கிட்டுமா?அன்பு!

                                        காக்கை,  குருவியைத்
                                        தனது   சாதியாக்கினான்
                                        கடலையும்,மலையையும்
                                         கூட்டுச்  சேர்த்தான்,
                                         காஷ்மீரிலே  மக்களே
                                         காக்கையாய் ,குருவிகளாய் !

                                         மன முரசம்   முழங்கட்டும்
                                         மகிழ்வோடு  வாழ்வோம்
                                         அகமுரசு  ஆர்ப்பரிக்கட்டும்
                                         அன்பு  கெழுமி  வாழ்வோம்!

                                         இதயத்தின்  லப்,டப்  கூட
                                         இனிமையோடு  இசைக்கட்டும்
                                         அன்புற்று  வாழ்வோம் -நாம்
                                          இன்புற்று  வாழ்வோம்!!

Friday, August 20, 2010

சக்தி பிறக்குது மூச்சினிலே

                                               தந்தையர் நாடென்றபோது
                                              சக்தி  பிறந்தது,எந்தன்
                                              சாகசக் கவி  பாரதிக்கு,எந்தனுக்கு

                                             அகண்ட  பிரபஞ்சம்  அகக்கண்ணில்
                                             விரிந்தால்,
                                             அன்பு  பெருகுது  மூச்சினிலே,

                                             ஆன்மீக  மணத்தில் மனமது
                                             தோய்ந்தால்
                                             ஆற்றல் வருகுது  மூச்சினிலே,

                                             இகமதில் உள்ள  இயற்கை காணில்
                                              இதமே  நிறையுது  மூச்சினிலே,

                                             ஈகை நிறைந்த மனமது  காணில்
                                             இன்பமே  பிறக்குது மூச்சினிலே,

                                            உன்னதமான  உலகது கண்டால்
                                            உருவாகும்  சக்தி மூச்சினிலே,

                                           ஊக்கம் என்றும்  உளத்திலிருந்தால்
                                           ஊற்றாய்  சக்தி  மூச்சினிலே,

                                          எல்லை இல்லாப் பரம்பொருளாலே
                                          எந்நாளும்  சக்தியே மூச்சினிலே,

                                           ஏற்றம்  என்றும்  வாழ்விலிருந்தால்
                                           ஏகமான  சக்தி   மூச்சினிலே,

                                           ஐயம்  போக்கி,ஐஸ்வர்யம் பெருக்கினால்
                                           ஆனந்தமான சக்தி மூச்சினிலே,

                                           ஒற்றுமை  நாளும்  நம்மிலிருந்தால்
                                           நலமான  சுவாசம்  நாசியிலே,

                                           ஓர்  குலமாய்  மனிதம்  வாழ்ந்தால்
                                           ஓங்குது  சக்தி  மூச்சினிலே,

                                         ஔவை  சொன்ன  மொழி
                                          ஔடதமானால்,
                                        ஆனந்தமான  சக்தி  மூச்சினிலே..........

Monday, August 16, 2010

எல்லாத் திசைகளிலும் விடியல்

                                            எங்கு  நோக்கினும்  மடியல் ,
                                            இதில்  எங்கே  விடியல்?

                                            எதிர்மறை  எண்ணத்தை
                                            எரித்திடவே  எண்ணுகிறேன்
                                            எதிர் நோக்கி  வருகிறதே
                                            எல்லாத்  திசையிலிருந்தும்!

                                            இயற்கையே,
                                            பேரழிவு  நிகழ்ந்தும் -நீ
                                            பேதலிக்கவில்லை -மேலும்
                                            பொங்குகின்றாயே,
                                            வெள்ளமாய்,வெடி விபத்தாய்,

                                           எத்தனை  அழிவு  நேர்ந்திடினும்
                                           அகம் அணு ஆயுத ஆக்கத்திலே,
                                           விடியும்  கீழ்த்திசையையும்
                                           வெடிப்புகை  மறைக்கிறதே,
                                           விடியல்  எங்கே?

                                           அகத்தை  அன்பாக்குவோம்,
                                           எல்லாத் திசையிலும்  விடியும்!
                                        
                                         பழக்கத்தைப்  பண்படுத்துவோம்,
                                         எல்லாத்  திசையிலும் விடியும்!

                                         கருணையோடு  காரியமாற்றுவோம்
                                         எல்லாத் திசையிலும்  விடியும்!

                                         அழிவு  தரும்    விஞ்ஞானம்
                                          தளரட்டும்,
                                          ஆற்றல்  தரும்   மெய்ஞானம்
                                          வளரட்டும்! வளர்ந்தால்
                                          எல்லாத் திசைகளிலும் இதமாய்
                                           விடியும்!எங்கும் சுகமே  படியும்!!

Sunday, August 15, 2010

அணு ஆயுதம் இல்லா அகிலம் சமைப்போம்

                        அனு தினமும்  நாளிதழை விரித்தால்
                        அணு குண்டு  வெடிப்புகளே
                        தலைப்புச்  செய்தியாய்,
                        தலை  போன  செய்தியாய்!



                        ஆற்றாமையால்  துடிக்கும்
                        மழலையரும்,மங்கையரும்
                        அலறிக் கொண்டு  ஓடும்
                        ஆடவரும்,பெண்டிரும்,

                        புகைப் படமாய்ப்  பார்க்கும் போதே
                        உள்ளம்    புண்ணாகிறதே,
                        இரக்கமற்ற  அரக்கர்களே,
                        இழி நிலையே,கடை நிலையே
                        கடைத் தேறவே  மாட்டீரா?

                        சுக்கு நூறாய்ச் சிதறும்
                       மக்கள்  கூட்டம்,
                        சுடுகாடாய் நாடு  மாறும்
                        கோரக் காட்சிகள்
                        எதிலிருந்து  சுதந்திரம்  அடைந்தோம்?

                        உலக சமாதானம் வேண்டி  பறக்கவிடும்
                     வெண் புறாவும்  வெடித்துச்  சிதறுகிறதே                    
                     வெடிகுண்டு  வெள்ளத்தில்.

                                               மாறுமா  இந்த  அவல  நிலை?
                                               மறையுமா  இந்த  துயரச்சுமை?

                                               சுதந்திரம்   பெற்று விட்டோம்
                                               தந்திரம்  கற்று,விற்றோம்
                                               யந்திர  உலகினில்  வாழும்
                                               மந்திரம்  அறிந்திடுவோம்
                                               மனதினை  மணமாக்குவோம்
                                              பின்னர்,

                                              சுந்தரமானதொரு  பூமிப்பந்தில்
                                             சுகமானதொரு   காற்றைச்
                                             சுவாசிப்போம் ,அதனோடு
                                             சுதந்திரத்தையும்    சேர்த்து!
                                         வந்தே   மாதரம்!வந்தே  மாதரம்!!       

Wednesday, August 11, 2010

ஆற்றல் மிகு கவிஞன்

                                                        
                                    இயற்கையான  ஆற்றலென்று
                                    இன்னமுதக்  கவி  இயம்பிய பின்
                                    பேர் அரசின்  பெருமை  பாடும்
                                     பேறு   உண்டா   எனக்கு?

                                    உந்தன்  நூல்களை  வாசிக்க,வாசிக்க
                                    எந்தன்  இதய  வானில்-நாளும்
                                     வைகறை   மேகங்கள் தான்!

                                    சகோதரா,உங்கள்
                                    மௌனப்பூ  பேசிய மழலை தான்
                                    எந்நாளும் என்னுரைக்கு  முன்னுரை!
                                   
                                    கறுப்பு  நிலாவைப்  பாடாமல்-வகுப்பில்
                                    கவிக்கோ  இளங்கோவின்  சிலம்பைச்
                                    செப்பியதில்லை!

                                    கற்பொன்றில்  மட்டும்   கண்ணகியைப்
                                    போலிருங்கள்,
                                    மற்றவற்றில்  அந்த  மடமகளை
                                    மறந்திடுங்கள்.

                                  வகுப்பறையில்  பிள்ளைகளைக்
                                  கூட்டாகச்  சொல்லச் சொல்லி
                                  குதூகலித்திருக்கிறேன்! 

                                 அலைகளை  தகுந்த  உரைகளாக்க
                                 தங்க கவி மகன்  உனையன்றி
                                தரணியிலே  யாருண்டு?

                                ஊசியை  ஒற்றுமையின்  சின்னமாக்கிய
                                உன்னதக்  கவியே!உயர்ந்தாய்  நாளும்  நீ,
                                எந்தன்
                                மகளின்  மகனைக்  கையிலெடுத்து
                                மகிழ்வோடு  சொல்லுகின்றேன்-ஆம்
                               பருத்து  விழுந்த  பரிசுச்  சீட்டே!
                               களஞ்சியம்  எங்கள்  கண்மணியும்,
                              கவிதையைப்  போலவே! 
                                 

மானுட சமுத்திரம் நானென்று கூவு

                                        அடகிலிருந்து  மீண்ட  நாம்
                                        அரசியலால்  அடிமைப்பட்டிருக்கும்
                                        மானுட  சமுத்திரத்தின்
                                        ஓர்  துளி  நான்!

                                        சாதி,சமயச்  சண்டைகளைச்
                                        சகித்திடவே   முடிந்திடாத
                                        மானுட  சமுத்திரத்தின்
                                        ஓர்  துளி  நான்!

                                       கையூட்டுக்  கலாச்சாரத்தால்
                                       கலங்கியே   தவித்திடும்
                                       மானுட   சமுத்திரத்தின்
                                       ஓர்  துளி  நான்!

                                       கண்டங் கடந்து  காசு காண
                                       விழையும்-கவலையால்  கரைந்திடும்
                                      மானுட  சமுத்திரத்தின்
                                      ஓர்  துளி  நான்!

                                       காப்பக  கலாச்சாரத்தால்
                                       கலங்கியே  தவித்திடும்
                                       மானுட  சமுத்திரத்தின்
                                       ஓர்  துளி  நான்!

                                      குரல்  கொடுக்கவே  முடியாத
                                      நிலையில்-கூவுவது  எங்ஙனம்?
                                      வன்மை   தவிர்ப்போம்,
                                      உண்மை   வளர்ப்போம்,
                                      நன்மை    செய்வோம்,
                                      தீமை     களைவோம்,
                                      அதன்   பின்
                                       உரத்த   குரலில்   கூவுவோம்,
                                       உவகையோடு   கூவுவோம்,
                                       மானுட    சமுத்திரத்தின்
                                       ஓர்  துளி    நானென்று! 

Tuesday, August 10, 2010

அறிவியல் கவிஞன்

                                                 தமிழன்னையின்  மணிமுடியில்
                                                 வைரம்    நீ!
                                                 தமிழ்  ஆழியில்   அகப்பட்ட
                                                 கறுப்பு   முத்து!!

                                                தமிழ்  வானின்  வைகறை  மேகமே,
                                               வாழ்த்த வயதில்லை  -வணங்கி
                                                மகிழ்கின்றேன்!
                                               போற்றிப் பாடும்  புலமை  இல்லை,
                                                புகழ்ந்து  நாளும்  பாடுவேன்!
                                                ஏற்றிப்  பாடும்  திறம்   இல்லை,
                                                என்றும்  நலம்  பாடுவேன்!

                                               வார்த்தைக் காற்று   மேகம்
                                                வருடினால்,
                                                வான்    மழை   பொழியாதே,
                                                வர்(ரு)ணனை   மழை!!
                                                விசும்பின்  துளி  வீழட்டும்,
                                                பசும் புல்லாய்  தமிழிதயங்கள்
                                                தளிர்க்கட்டும்!