Sunday, June 5, 2011

உயிர்களிடத்தில் அன்பு வேணும்


                                    அழகிய  வீடு.  பின்புறம்  ஒரு   அற்புதத்  தோட்டம்   அமைத்திருந்தார்  முத்தண்ணா.முத்தண்ணா  ஜெயராஜ்  வீட்டின்  தோட்டக்காரர்.
மாலை நேரம்  ஜெயராஜ்  வீட்டுத்  தோட்டத்தைச் சுற்றி  வந்து  கொண்டிருந்த  பொழுது  மரத்தின்  மீது  கூடிருப்பதைக்  கண்டார்.
                                                            அவர்   பார்த்த  அந்த   சமயத்தில்   தாய்ப்பறவை   குஞ்சுகளுக்கு  இரை   ஊட்டிக் கொண்டு  இருந்தது.பாரதிதாசனின்  ''குஞ்சின்   குடல்    நிரப்பும் '' என்ற    வரிகள்  தான்   மனதில்    ஊடாடியது.அந்தப் பறவை  வாய்  திறந்திருந்த   அழகு    மழைநீரை  நாடும்   மலரைப்  போலவும்,மழையை அருந்தும்  சாதகப் பறவை  வாய்   திறந்து  சாதகம்    செய்வதாகவும்    ரசனையோடு  கூடிய  சிந்தனைகள்   மனதில்   ஒன்றன் பின்  ஒன்றாய்     வந்து  போனது.
                                                         முத்தண்ணாவை    அழைத்தார்     ஜெயராஜ்.செடிகளுக்கு   நீர்     வார்த்துக்  கொண்டிருந்த  அவர்    வேகமாக   ஓடி வந்தார்.கூட்டினைக்  காண்பித்த   அவரிடம்   முத்தண்ணா   வேகமாக   ,''நானும்   பார்த்தேன் ஐயா,இன்றே  கலைத்து   எறிந்து விடுகிறேன் '' என்றார்.
அதற்கு   ஜெயராஜ்,முத்து! கலைக்காமல்   இருப்பது   மட்டுமல்ல.முடிந்தால்  பத்திரமாகப்  பார்த்துக் கொள்.உரிய  பருவம்   வந்ததும்   தானாகப்   பறந்திடட்டும்   என்றார்.முத்தண்ணாவும்,சரி  ஐயா   என்றார்.
''உயிர்களிடத்தில்    அன்பு   வேணும்''   பாரதியின்  வரிகளைப்  படம் பிடித்துக்  காட்டுவதாயிருந்தது  ஜெயராஜின்  செய்கை.

Friday, June 3, 2011

ஆற்றல் மிகு கவிஞன்

                                                     
                                    இயற்கையான  ஆற்றலென்று
                                    இன்னமுதக்  கவி  இயம்பிய பின்
                                    பேர் அரசின்  பெருமை  பாடும்
                                     பேறு   உண்டா   எனக்கு?

                                    உந்தன்  நூல்களை  வாசிக்க,வாசிக்க
                                    எந்தன்  இதய  வானில்-நாளும்
                                     வைகறை   மேகங்கள் தான்!

                                    சகோதரா,உங்கள்
                                    மௌனப்பூ  பேசிய மழலை தான்
                                    எந்நாளும் என்னுரைக்கு  முன்னுரை!
                                 
                                    கறுப்பு  நிலாவைப்  பாடாமல்-வகுப்பில்
                                    கவிக்கோ  இளங்கோவின்  சிலம்பைச்
                                    செப்பியதில்லை!

                                    கற்பொன்றில்  மட்டும்   கண்ணகியைப்
                                    போலிருங்கள்,
                                    மற்றவற்றில்  அந்த  மடமகளை
                                    மறந்திடுங்கள்.

                                  வகுப்பறையில்  பிள்ளைகளைக்
                                  கூட்டாகச்  சொல்லச் சொல்லி
                                  குதூகலித்திருக்கிறேன்! 

                                 அலைகளை  தகுந்த  உரைகளாக்க
                                 தங்க கவி மகன்  உனையன்றி
                                தரணியிலே  யாருண்டு?

                                ஊசியை  ஒற்றுமையின்  சின்னமாக்கிய
                                உன்னதக்  கவியே!உயர்ந்தாய்  நாளும்  நீ,
                               
                                மழலை தனைக் கையிலெடுத்தால்
                                மகிழ்வோடு  சொல்லலாம்-ஆம்
                               பருத்து  விழுந்த  பரிசுச்  சீட்டே!
                               களஞ்சியம்    தான்  கண்மணியும்,
                              கவிதையைப்  போலவே!

                              ஆறாம் முறை விருது பெற்ற
                              ஆற்றல் மிகு கவிஞனே!
                               வாழிய பல்லாண்டு!!
                                

Wednesday, June 1, 2011

இனிமை







                                     
                                           
                                             
                                               மழலை     இனிமை
                                                மலரும்     புதுமை
                                                மண்ணுலகு   இனிமை



                                                தென்றல்    இனிமை
                                                தெம்மாங்கு   இனிமை
                                                தேனுலகு     புதுமை



                                               விண்ணும்   புதுமை
                                               விடியல்      இனிமை
                                               வியனுலகு  இனிமை



                                                இயற்கை    இனிமை
                                                இகமே      புதுமை
                                                இன்னுலகு   இனிமை


                                                இன்னுலகினையே
                                                இணைக்கும்  பாலமாம்
                                                 கணினிதான்  புதுமை-அதில்
                                                இணையம் தான்   இனிமை!





வாழ்வின் எல்லை






                               மனதிற்கு   எல்லையுண்டா?
                               மண்ணுலகு   கடக்கும்.

                               அகத்தின்   ஆற்றலுக்கு
                               எல்லை    எது?

                                உளத்தின்   ஊற்றுக்கண்ணுக்கு
                                எல்லை     ஏதேனும்?
                                பாதாளம்    பாயுமோ?

                                மண்ணுலகு    கடந்தாலும்
                                ஆகாயம்    தாண்டினாலும்
                                பாதாளம்    பாய்ந்தாலும்
                                வாழ்வின்   எல்லை?

Tuesday, May 31, 2011

காக்கைக்கும்....


                                                உணர்வுகளின் வடிகால்
                                                உன்னதமான எழுத்து
                                                 உருகச் செய்திடும்-அத்தகு
                                                உயரிய படைப்பு .

                                                சிந்தனைச் சிற்றுளி கொண்டு
                                                செம்மையுறச் செதுக்கினாலே
                                                வளமான வடிவமது
                                                வனப்புறவே உருவாகும்.

                                                 தனிமையிலே இனிமை
                                                 காண முடியுமா?-முடியும்
                                                 கவித் தவம் செய்திடவே
                                                 தனிமை தேவை.

                                                வீட்டிலே சிறகடித்தால்
                                                விபரீதம் விளைந்திடும்
                                                வகுப்பறைச் சிறகடிப்போ
                                                வம்பிலே தான் முடியும்


                                              இயற்கையின் மடி
                                              இனிமைக்குப் படி,
                                               அந்த அமைதியிலே
                                              சிந்தனைச் சிறகிற்கு
                                             இறகு முளைக்கும்!

                                              கருத்துக் கோவை
                                             கவிதையாகுமிடமிதுவே-இதில்
                                             சிறப்புறு கவிதைகள்
                                             தோன்றா விடினும்
                                             சிக்கலான சிந்தனைகள்
                                             தோன்றாது

                                            வனப்புமிகு வார்த்தை
                                             அலங்காரமில்லாவிடினும்
                                           வளம் குறைந்திட்டு
                                            வருத்தம் தோற்றாது

                                            ஏற்றம் மிகுந்த எழுத்தாக
                                           இல்லாவிடினும்-நான்
                                            ஈன்றவை  எனக்கு
                                            பொன் குஞ்சுகளே....

                                                

Thursday, May 26, 2011

கல்லூரி


                                       கல்விக் கூடம்   பலருக்கு,
                                       களியாட்டக் களம்   சிலருக்கு

                                       எப்படியோ,

                                       வாலிபப்     பறவைகளின்
                                       சுகமான    வேடந்தாங்கல்!

அஞ்சல்வழிக் கல்வி


                  
                                       சந்தர்ப்பம் நழுவியவர்களின்
                                       சங்கடம் போக்கிடும்
                                       சமய சஞ்சீவியே!


                                      பட்டங்களாகப்  பலரிலும்
                                      பணமாகப்   பலரிலும்
                                      பட்டறிவாகச்  சிலரிலும்
                                      பரிமளிக்கிறாய்!


                                      இந்த  அ.வ.வுக்காக
                                      மு.வ. அவர்களுக்கு
                                       அகம் கனிந்த நன்றி!

Thursday, May 19, 2011

வரம்


                     
    பூக்களின்                          
    கருவறை உமது
    பிறப்பிடமோ?
    புன்னகை அதரம் உந்தன்
    சிறப்பிதழோ

      அழகிய வதனம் உந்தன்
      ஆயுசு பரியந்தம்
      உந்தன் பிறப்பே
      எந்தன் சிறப்பு !
      உமது தரம்இறைவன்
      எமக்களித்த வரம்
.
                     

    

Tuesday, May 17, 2011




அன்பு,
    அந்த அற்புத ஆற்றலின்
     அழகிய பரிமாணமே,அன்னையே!
இரக்கமே,
      இனிய அன்னையின் இதயப்பிறப்பே,
      ஆதர்ச அன்னையின் அருட்சுரப்பே,
கருணையே,
      காக்கும் அன்னையின் கண்ணிலே
        கனிவெனக் கரைந்து மறைந்தாயோ?
பரிவே,
      பாரில் எங்கோ உதித்திட்டு
        பாரதம் சேர்ந்திட்டது புண்ணியமே!
   தவமும்,யோகமும் நீர்      தனியாய்ச் செய்திடவில்லை-உமது
   
  கர்ம யோகத்தினாலே
  காளி நகரமே கண்ணியமானதே!
    தாய்மையிலே இறைமையாம்
   இறைமையே தாயாக வந்திங்கு
    தன்னிகரற்று விளங்கியது.
     ஆன்மீகவாதிகளின் ஆயிரமாயிரம்
      அறிவுரைகள் எல்லாம்-உந்தன்
    அறப்பணியின் முன்னாலே சற்று
       மாற்றுக் குறைவு தான்.
      நோபல் பரிசால் உமக்குப் பெருமையா?
       நிச்சயம் இல்லை
     உம்மால் தான் அப்பரிசே உயர்ந்தது

       

Monday, May 9, 2011

சுகம்


                                    ஆசிரியத் தொழில் -ஆஹா
                                     எத்துணை அழகானது?
                                 
                                     தொழிலா இது ?- இல்லை
                                     தவம் ,தியானம் ,யோகம்

                                     ஆசிரியரைப் பார்க்கையில்
                                      அகம் மகிழ்கிறதென்றால்

                                      ஆசிரியராய் இருக்கையிலும்
                                      அகம் குளிர்கின்றது.

                                     ஏறி வந்த ஏணியினை
                                     எண்ணிப் பார்ப்பதொரு சுகமெனில்,
                                     ஏணியாய் நிற்பது கூட
                                     எந்நாளும் சுகமே!

                                      

Sunday, May 8, 2011

அம்மா


                                            எனக்கு உயிர் கொடுத்தவள்

                                           தனக்கு ஏதும் எடுத்திலள்
     
                                           எண்ண எண்ண இனிப்பவள்

                                          எண்ணம் முழுதும் நிறைந்தவள்

                                           நாளும் நம்மைக் காப்பவள்

                                          நலமே என்றும் தருபவள்

                                          தன்னிகரில்லாதவள் என் தாய்

                                         தரம் உயர்ந்த அவளின் சேய் நான்!

Saturday, May 7, 2011

இந்தியன்

இந்தியன் என்று பெருமை கொள்வோமடி!


  •            பாரத நாட்டின் அஞ்சல்துறை தான் உலகத்திலேயே மிகப் பெரிய அஞ்சல்துறை.
  • உலகிலேயே அதிகம் பால் உற்பத்தி பாரதத்தில் தான்.
  • வைரங்களுக்குப் பட்டை தீட்டுவதிலும்,ஏற்றுமதி செய்வதிலும் உலகிலேயே முதலிடம் பாரதத்திற்கே.
  • சிமென்ட் உற்பத்தியிலும் முதலிடம் பாரதத்திற்கே.
  • தேயிலை உற்பத்தியிலும் முதலிடம்.
  • உலகின் மிகப் பெரிய வங்கிக் கிளைகள் பாரதத்தில் தான்.
  • உலகிலேயே முதலாவது பெண் விமான ஓட்டியை 1966ல் நியமித்தது இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனம்.
                                                -விவேகானந்தா கேந்திர வெளியீடு..

Wednesday, May 4, 2011

வையம் வாழ வாழ்

     
                                  வையம் வாழ வாழ்ந்திட நினைத்திருந்தால்
                                  வந்திருக்காதே இந்த சோகம் யாவும்
                                  கம்பீரமான இரு கட்டிடங்கள்
                                  கற் குவியல்களாய்!

                                  சகித்திட முடியாத சாக்காடு
                                  தீர்த்திட முடியாத தீவிரவாதம்
                                  அணுகுண்டுகளின் ஆக்கம்
                                  அகிலம் முழுவதுமே அதன் தாக்கம்

                                   எல்லோரும் நலம் பெறவேண்டும்
                                                                         என எண்ணியிருந்தால்
                                   ஏனிந்த அழிவு?

                                   அன்போடு வாழும் ஆவல் கொண்டால்
                                   அவனியில் ஏனிந்த அழிவு?
                                   அன்றைய நாளில்,மரணம் வந்தது
                                   காலராவாய், அம்மை நோயாய்
                                   ஃப்ளேக்காய் ,எலும்புருக்கியாய்
                                  அனைத்தையும் தடுத்தோமே-நம்
                                   அறிவியல் ஆற்றலால் !

                                  அணுகுண்டு ஆற்றலால்
                                   அள்ளிக் கொடுக்கின்றோம்
                                  மரண தேவதையின் மடியே
                                  நிரம்பி வழிகின்றது.
                             
                                 தீவிரவாதம் புரியும்
                                 தீயவர்களைத் தீயிலிடுங்கள்
                                 மதவாதத்தால் மாய்ந்திடும்
                                  மடையர்களை மண்ணிலிடுங்கள்

                                களங்கம் புரியும் கயவர்களை
                                 காற்றோடு கலந்திடுங்கள்
                               அட்டூழியம் புரியும் அற்பர்களை
                               ஆகாயத்திற்கு அனுப்புங்கள்

                               நாசம் செய்யும் நீசர்களை
                               நீர்ப் பெருக்கிலிடுங்கள்.
                               பஞ்ச பூதமும் பங்கிட்டுக் கொள்(ல்)ளட்டும்
                               பகையாளிகளை,பின்னர் நம்
                               அன்னை பூமி
                               அழகின் வடிவமாகட்டும்,
                               அன்பிலே தோயட்டும்
                                வையம் வாழ்ந்திடட்டும்
                               நாமும் வாழ்வோம் !
                               நலமாய் வாழ்வோம் !!

Wednesday, April 27, 2011

பூக்களின் புன்னகை


                                                   மழலைகளின் மலர்ச்சி
                                                   பூக்களின் புன்னகை.


                                                அன்பானவர்களின் அழகு
                                                 பூக்களின் புன்னகை.


                                                     மென்மையானவர்களின் இளநகை
                                                      பூக்களின் புன்னகை

                                                   மேன்மையானவர்களின்
                                                   குறு நகையும்
                                                    பூக்களின் புன்னகை

                                                   புனிதமானவர்களின் பூரிப்பு
                                                   பூக்களின் புன்னகை!

Sunday, April 24, 2011

கல்வியின் சிறப்பு


                        பாடம் நல்லா படிக்க வேணும் சின்னக்கண்ணு
                        படிச்சு நாளும் உயர வேணும் செல்லக் கண்ணு

                       பள்ளிக் கூடம் கோயில் தானே சின்னக்கண்ணு
                       ஆசிரியர்கள் தெய்வங்களாம் செல்லக்கண்ணு

                       பண்பாலே நாளும் உயர சின்னக் கண்ணு
                       பக்குவமாய் நீயும் பழகு செல்லக் கண்ணு

                       எந்நாளும் நலம் பெறவே சின்னக் கண்ணு
                       ஏற்ற படிப்பை நீ படித்திடு செல்லக் கண்ணு

                      அன்பு தானே அரிச்சுவடி சின்னக் கண்ணு
                      அருமைக் கல்வி தானே அதையும் தரும்
                                                                           செல்லக் கண்ணு

                     உயர் படிப்பு நீ படித்தால் சின்னக் கண்ணு
                     உலக நலமனைத்தும் பெற்றிடலாம்
                                                                       செல்லக் கண்ணு!


Wednesday, April 20, 2011

உணவே மருந்து


                                       உணவே மருந்து
                                       ஆம் ! மருந்தே உணவு
                                       வண்ண வண்ண மாத்திரையாய்
                                       மட்டுமல்ல,
                                      
                                       வகை வகையான காய்கறியாய் !

                                  வனப்பான புட்டியில் கோக்காய் !

                              வண்ண வண்ண வடிவினில் கேக்காய் !