Tuesday, April 3, 2012


                                        அதியமான் ஔவைக்குத் தந்த
                                        அதிசயக் கனியே,
                                        அறுசுவையில் ஒரு சுவையே!
                                        அருமருந்தே,இளமைக்கு விருந்தே!

                                         ஆப்பிளின் மாற்றாம் உன்னில்
                                          ஆயிரமாயிரம் உயிர்ச்சத்து!
                                          கசப்புச் சுவை கடக்க நீரைக்
                                          குடித்தால், இனிப்பு !
                                          வாழ்வின் விளக்கமன்றோ நீ?
                                     
                                         

Monday, April 2, 2012

தட்டாமலே.......





                                              தட்டுங்கள் திறக்கப்படும்
                                              கேளுங்கள் கொடுக்கப்படும்

                                              இது இயேசு பிரானின்
                                              இனிய வாசகம்-ஆ.னால்

                                               தட்டாமலே திறக்கப்படும்
                                                நல்லோரின் மனக்கதவுகள்
                                              கேளாமலே கொடுத்திடும்
                                              அவர்தம் திருக்கரங்கள்

                                              வல்லான் பொருள் குவிக்கும்
                                               தனிஉடமை -நீங்கி
                                              வரவேண்டும் திருநாட்டில்
                                              பொது உடமை!

Saturday, March 31, 2012

முக்கண்ணனே!


                                             அரை மணித் தவமே
                                              அவஸ்தையாயிருக்கையிலே,
                                              ஆண்டு முழுதும் தவம்!

                                              அனுபவிக்கிறாயா ஆண்டவனே
                                               எங்களுடைய உடைமையை
                                               எடுத்துக் கொண்டு,
                                               முக் கண்ணனாய்!

மதிப்புக் கொடுங்கள்

                             கேட்டு வாங்கிட இது என்ன
                              கடைச் சரக்கா?
                             
                             
                                 
                                   ''எல்லோர்க்கும் நன்றாம் பணிதல்''
                                    பொய்யா மொழிப் புலவனின்
                                    பொன் மொழி.

                                    எல்லோரையும் பணிதல் என்பது
                                     ஏற்புடையதே என்றாலும்
                                    ஏற்போரின் செயல்பாடும் அதிலடங்கும்

                                     ஆனால்,
                                      முதுமை என்பது வாழ்வின்
                                       வழிகாட்டி,
                                     
                                      அன்றைக்கு ஆற்றலின் அரங்கம்
                                       இன்றைக்கு அனுபவச் சுரங்கம்
                                       அந்த ஆற்றலின் அரங்கு தந்த
                                       அனுபவங்களாலே தான்-நம்
                                       வாழ்க்கைப் பாதை வளமாகும்
                                       நலமாகும்.

Monday, March 26, 2012

நல்லதோர் வீணை செய்தே........

நல்லதோர் வீணை செய்தே -அதை
நலங் கெடப் புழுதியில் எறிந்து
விட்டாயே ! சிவ சக்தி
நீ தந்த சுடர் மிகு அறிவால் உலக
சூட்சுமம் உணர முடியவில்லையே!

மரபின் மைந்தன் சொன்னார்
சிறப்பான தலைமை உனக்கு
வாய்க்கப் பெறவில்லையென்றால்
அது துரதிர்ஷ்டமென்று!
பணிக்காலம் பலருக்கு
துரதிர்ஷ்டமே!

துரியோதன மனத்தின் விளைவா?
துர்மனத்தின் துன்பம்தரும் கலர்கண்ணாடியா?

மெத்தப் படித்த மேதாவித் தனத்தால்
மேலாண்மையை மேலாண்மை
செய்ய இயலவில்லை.

ஆண் தலைமை அரக்கத்தனமாய்,
பெண் தலைமையோ அசுரத் தனமாய்!

ஆசுவாசம் தேடி அடைக்கலமானேன்
வகுப்பறையில்!
எந்தன்
சுவாசத்திலே சுகந்தம்
மூச்சிலே உயிர்ப்பு
மலர்க்கூட்டம் எந்தன்
முன்னால்,
ஆஹா!
ஆசையாய்ப் பேசினேன் அதனிடத்தில்
அலுவலக அறையிலிருந்து அழைப்பாம்!
அய்ந்து நிமிடம் கூட ஆகவில்லை,
ஆறு மாதத்திற்கு முன் விட்டுப் போன கையெழுத்தாம்,
அரைகுறையாய் விட்டது தொடர்ந்தேன்
அடுத்த வகுப்புப் பிள்ளை வந்தாள்,
''அன்பரசியை அறிவியல் ஆசிரியை''கூப்பிடறாங்க,
''போ'' சொல்லிவிட்டுப் பாடத்துள் புக முயன்றேன்
''இழுப்பறையில் இங்கிலீஷ் நோட் இருக்கிறதாம்''
இளவரசி வந்து நின்றாள்
''இம்சை''என்றபடி கொடுத்துவிட்டு நிமிர்ந்தேன்
இழுத்தடித்த மணியின் ஒலியில்
இனிய சுவாசம் கரைந்தே போனது
இன்மலர் முகங்களும் உதிர்ந்தே போனது

சிவ சக்தீ!!
பாரதிக்குப் பகர்ந்தாயா பதிலினை?
பரவாயில்லை,எனக்குச் சொல்லிடு

இறுகிய மனத்துடனே இளம் பிள்ளைகளைப்
பார்க்கும் மனம் தந்திடு!

சுற்றியிருக்கும் குப்பைக்கு நடுவில்
சுற்றுச் சூழல் மேம்பாடு சொல்லும்
சூட்சுமம் சொல்லிடு!

இளகிய மனம் இரும்பாக்கு!
நலம் கெடப் புழுதியில் எறிந்து விட்டாயே!

Friday, March 9, 2012


                                         அமுதே ,தமிழே அழகிய மொழியே
                                         எனதுயிரே!
                                         அழகே ,அன்பே அருமை மழலையே
                                        எனதுயிரே !
                                       
                                        சுந்தரமே ,வாழ்வின் சுகந்தமே!
                                        மழலையே.வாழ்வின் மகிழ்ச்சியே!
                                       மந்திரமே ,வாழ்வின் மகத்துவமே!
                                       தழலெனச் சுடர்விடு நெஞ்சத் தடாகத்தில்!

Friday, March 2, 2012

சாதிசம யச்சழக்கின் சஞ்சலமும்;சச்சரவால்
மோதிமன மச்சுறலும்; முட்டாகும் -நீதிதனால்
ஆதிமொழி  ஆழ்ந்திடலும் அற்றுவிழுந் தன்பிலோங்க
வாதிரிவாம் புத்தாண்டே வா.


                                                    -புலவர்.பரமசிவம்.
ஓர்புவியில் ஈர்நிலையாம் ஒண்பகல்அல் நாள்நூறின்
சீர்தொடுக்கின் மூன்றுடன் சேர்;சீர்நாட்கைந்-தோர் மூன்றாம்
ஆர் பெருக்கல் செய்;உடன்எண் ஐந்தினைச் சேர்;புத்தாண்டே 
பார் !தமிழ்நேர் !சீர்பகர்நல் வாழ்த்து!

                                                   -புலவர்.சி.பாண்டுரங்கன்.

Wednesday, January 18, 2012

சுய பார்வை

படித்ததில் பிடித்தது.

வா ,சகோதரி
இந்த
வார்த்தை வளையங்களை
விட்டு
வெளியே வருவோம் !

அதிகம் பேசுபவள் பெண்
என்று
அதிகம் பேசுபவரை
ஆச்சர்யப்படுத்துவோம் !

மென்மை என்ற
போர்வையை உதறி
மேன்மை என்னும்
உயரம் தீண்டுவோம் !

உதட்டுச் சாயம்
உயரச் செருப்பு
என்ற
அடையாளம் அழிப்போம்

நம் முதுகுக்குப் பின்னால்
வீசப் படுபவை
கத்திகள் அல்ல, வெறும்
காகித அம்புகளே!

கண்ணீரல்ல நம் ஆயுதம்
பெண்மையின் கம்பீரம்

நம்மிடம் இருக்கட்டும்
தாய்மையின் கனிவும்
தளராத உழைப்பும் !

எல்லோரிடமும் நட்பாயிருப்போம்
எல்லைகள் தாண்டினால்
எவரையும் மறுப்போம் !

நாம் குளிக்க அல்ல நெருப்பு
நம் விழிகளில் இருக்கட்டும்
அதன் இருப்பு !

Saturday, October 15, 2011

தேர்வு




எதில் தேறினாய் ?
பண்பிலா ?
பட்டறிவிலா ?
ஒற்றுமையிலா ?
ஒழுக்கத்திலா ?
அன்பிலா ?
ஆற்றலிலா ?

எதில் தேறினாய் ?

இரு குறட்பா,நான்கு கேள்விகள்
பொருளறியாமல் மனனம்
செய்தலே தேர்ச்சியா ?
படம் வரைந்து பாகம் குறித்தலும்
உதவிப் படம் வரைந்து வடிவியல்
செய்தலுமே தேர்ச்சியா ?
அது தெரியாததால்,

எட்டிப் பார்த்தாய் ,எழுந்து நின்று
பார்க்க முயன்றாய்
எழுதிக் கொண்டு வந்திருந்த
நுண்ணெழுத்து விடையில் கேட்டிருந்த
கேள்விக்கான விடையில்லை எனினும்
விடவில்லை நீ! அதையே எழுதினாய்
தாளை மாற்றி எழுதிப் பார்த்தாய்!
ஆளை மாற்றியும் எழுதிப் பார்த்தாய்!
எதில் தேறினாய் நீ ?

Monday, October 3, 2011

மனித நலப்பொருளாதாரம்

நவீன பொருளாதாரச் சிந்தனைகளின் ஒரு பிரிவே மனிதநலப் பொருளாதாரம்.
விவேகானந்தரின் பொருளாதாரச் சிந்தனைகள் இந்தப் பிரிவைச் சேர்ந்தவை.

அமர்த்ய செனின் மனிதநலப் பொருளாதாரம்(welfare economics)
தங்கள் தலையெழுத்தை மாற்றிக் கொள்வதில் ஏழைகளுக்குச் சிறிதும் சுதந்திரமே இல்லை என்பதை அவர்களுடன் நாம் பழகும்போது தான் புரிந்து கொள்ள முடியும்.
'திறமைகளை வெளிப்படுத்த முடியாத நிலை தான் வறுமை'என்று கூறுகிறார் அமர்த்ய சென்.மக்களை மென்மேலும் திறமைகளை வெளிப்படுத்துமாறு செய்வது தான் வறுமையைப் போக்குவதற்கான சிறந்த வழி.
திறமைகளை வெளிப்படுத்த முடியாததால் தான் வறுமை தொடர்கிறது.இந்தியாவின் ஏழைகள் இந்தச் சுழியில் சிக்கித் தவிக்கிறார்கள்.
செய்யும் தொழிலே தெய்வம்-கொண்ட
திறமை தான் நமது செல்வம்.

Tuesday, September 20, 2011

வேலைக் கோட்பாடு


மார்க்ஸின் மூன்றாவது கருத்து இது.இதனைப் புரிந்து கொள்வதன் மூலம் சுவாமி விவேகானந்தரின் வேலைக்கோட்பாட்டின் பல ஆழமான பரிமாணங்களை அறிந்து கொள்ளலாம்.
வேலை என்பது சம்பாதிப்பதற்கான ஒரு வழி, புற வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான ஒரு வழி என்ற கண்ணோட்டத்திலேயே பல சிந்தனையாளர்கள் பார்க்கின்றனர்.ஆனால் மார்க்ஸ் அதன் மன இயல் பரிமாணத்தில் கவனம் வைத்தார்.வேலை என்பது வாழ்க்கையின் அடிப்படைத் தத்துவம்,மனிதனின் அக வெளிப்பாடு அது என்று கண்டார் அவர்.வேலையின் வாயிலாக அகத்திலுள்ள படைப்பாற்றல் வெளிப்பட,வெளிப்பட அந்த வேலையே மனிதனில் அக மாற்றங்களை ஏற்படுத்துகிறது.வேலையின் மூலம் அகத்திலுள்ள தெய்வீகம் வெளிப்படுவது பற்றி விவேகானந்தரும் பேசுகிறார்.எனவே இந்த விஷயத்தில் மார்க்ஸீம்,விவேகானந்தரும் ஒத்த கருத்து உடையவர்களாக இருக்கிறார்கள்.

Monday, September 12, 2011

புகைப் படம்


வண்ணமா?

கறுப்பு ,வெள்ளையா?

கவலையில்லை.

வாழ்வின் பதிவனைத்தும்

வனப்பே !

Monday, September 5, 2011

ஆசிரியர் தினம்

ஆசிரியத் தொழில் -ஆஹா
எத்துணை அழகானது?
தொழிலா இது?- இல்லை

தவம் ,தியானம், யோகம்

ஆசிரியரைப் பார்க்கையிலே
அகம் மகிழ்கிறதென்றால்
ஆசிரியராய் நிற்கையிலும்
அகம் குளிர்கின்றதே

ஏறி வந்த ஏணியினை
எண்ணிப் பார்ப்பதொரு சுகம்
ஏணியாய் நிற்பது கூட
எந்நாளும் சுகமே....

Friday, August 19, 2011

எல்லோர்க்கும் நன்றாம் பணிதல்

வள்ளுவம் உரைத்திடாத வழிமுறைகளே வாழ்க்கையில் இல்லை.தலைப்பாய் அமைந்து இருக்கும் இவ்வடியானது வாழ்வின் உயர் பண்பான பணிவு குறித்துச் சொல்லுவதாய் அமைகின்றது. இந்த அடி பற்றிச் சொல்லுகின்றது அடக்கமுடைமை என்ற அதிகாரம்.இந்த அதிகாரத்தின் முதல் குறளானது பணிவு என்பது ஒருவரைத் தேவருக்கு ஒப்பாக்கும் என்பதனை,
'அடக்கம் அமரருள் உய்க்கும்'என்கிறது.

மேலும் சான்றாண்மை என்ற அதிகாரம் கூறுவதாவது,
'ஆற்றுவார் ஆற்றல் பணிதல்'.அஃதாவது , திறமையாளரின் மிகப் பெரிய திறமை பணிந்து நடப்பது என்கின்றது.
செல்வமுடைக்கும் படையாக திரிகடுகம் சொல்கிறது.
''தாழ்வின்றிக் கொன்னே வெகுளி பெருக்கலும்''என்று.இஃது உணர்த்துவது அடக்கமில்லாமல் வீணாகக் கோபப் படுதல் செல்வத்தை அழிக்கும்.
இத்தகைய உயர் பண்பாகிய பணிவு நம்மிடம் இருந்தால் நாம் பேசுவன யாவும் இனிமையோடிருக்கும்.அதனையும் செந்நாப் புலவன் செப்புகின்றானே, 'இனியவை கூறலில்',
''சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்'' என்று
பணிவிருந்தால் பிறக்கும் சொற்கள் இனிமையோடு கூடியதாய் இருக்கும்.அவற்றைச் சொல்லுகின்றவர்க்கு இம்மை மட்டுமல்லாது,மறுமையிலும் கூட இன்பம் மட்டுமே விளையும்.
வாழ்வினில் வேண்டும் துணிவு
விலக்கிடல் வேண்டும் முனிவு
துணிவோடு சேர்ந்த கனிவு
இதற்கெலாம் வேண்டும் பணிவு.

Monday, August 15, 2011

சுதந்திரம்


தண்ணீர் விட்டா வளர்த்தோம் ?சர்வேசா
இப் பயிரைக் கண்ணீரால் காத்தோம்
கருகத் திருவுளமோ?
கதறினாயே பாரதியே
பலனில்லை இன்றும்
கருகும் உயிர்கள்
கறுப்புப் பண ஊழல்கள்
எங்கே போனது சுதந்திரம்?

எந்திரமாய் இயங்கும் உலகில்
தந்திரமாய்க் காரியம் செய்யினும்
மந்திரத்தால் மாங்காய் விழுமா?
சுதந்திரம் தான் சுகமே தரினும்
சூட்சுமமான சுமுகம் தருமா?

சுதந்திரத்திற்கான சூட்சுமம் காண
இயந்திர மனம் நிறுத்தி,
இதயத்தில் ஒளி ஏற்று-அந்த
ஒளியை வாழ்வின் வழியாய் தந்து

உயர் பண்பு,ஒழுக்கம் தந்து
மனித வாழ்வின்
துயர் துடைக்கும் மாண்புடைய பாரதம்

ஆன்ம ஒளி தனை ஏற்றி
மானுட வாழ்வின்
பான்மை உயர்த்திடும் பாரதம்

கலைகள் ,கல்வி யாவும் தந்து
மக்கள் வாழ்வில்
நிலை உயர்த்தியது பாரதம்

உலகம் உய்யவே
கலகம் தவிர்த்திட
உரைத்தது என்றும் பாரதம்
உரைப்பதொன்று,உறுவதொன்று
என்றிருந்தால்
உருப்படுமா நம் பாரதம்?

பாரதம் மட்டுமா?பாரோர் யாவரும்
பண்பில் சிறந்திட வேண்டும்
பண்படுத்துதல் நிலங்களுக்கு மட்டுமா?
உளங்களுக்குமே கேளீர்

உளம் உயர்த்த நலமே பெருகும்
நன்மைகள் யாவும் சாத்தியமே
சாத்தியம் இவையெல்லாம் சத்தியமென்பது
சுதந்திர வாழ்வின் சூட்சுமமே!


Friday, August 12, 2011

புதுக் கவிதை

‘’ இனியொரு விதி செய்வோம்’’

செய்தாயிற்று,

இலக்கணம் வகுத்து

இலக்கியம் படைப்போம்

படைத்தாயிற்று.

படைத்த இலக்கியம்

செய்த விதி

பிழையென்றானது.

இலக்கண மரபு மீறல் ,

பிழையென்ற கொள்ளலாகாது

இலக்கியமில்லையென்றும்

தள்ளலாகாது,

புதுக்கவிதை எனவும்

புரிந்து கொள்ளலாம்.

Thursday, August 11, 2011

வளைதல்


வளைந்தால் மட்டுமே வாழ்வா ?
வசதிக்காக வளைவது என்பதும்
வன்முறை ஆகாதா?

தலையே இல்லா உடலை நாமும்
என்னவென்று சொல்வோம்?
புதுத்தலை பொருத்தி இயங்கும் வாழ்வு
புனரமைக்கப் படுமா?

மூளை இட்டிடும் கட்டளையால் தான்
முழு உடலும் இயங்கும்
மூளையின் கட்டளை தவறென்றானால்
முறையற்றே மயங்கும்.

மயங்கிய தன்மையாயிருந்தாலும் கூட
இயக்கம் என்பதிருக்கும்
இயக்கம் என்பது இருப்பதனாலே
இளக்கம் வந்திடுமா?

இளக்கமில்லா இறுக்கமென்பது
இயந்திரமாகாதா?

மயக்கமும்,இறுக்கமும் கொண்ட மனது
மதி கெட்டே மாயும்
மதி கெட்டே மயங்கிய மனது
சதி மட்டும் புரியும்

விதியால் விளக்கிட முடியாததற்கு
விலக்கம் ஒன்றே தீர்வு.

Sunday, August 7, 2011

நட்பு

பழகிய நட்பு எவன் செய்யும் கெழுதகைமை
செய்து ஆங்கு அமையாக்கடை?
நட்பு,
அந்த அழகிய வார்த்தை
தந்த அகர வரிசையில்
மற்றொரு பரிமாணம்
இந்த நட்பு,
குறிஞ்சி மலர் தான்
ஆம்! இது சற்று வித்தியாசமானது
பன்னிரு ஆண்டுக்கொரு முறை
மலர்ந்தது அல்ல,
பன்னிரண்டு ஆண்டாய்
மலர்ந்திருந்தது.
அனிச்சமாய் சில தருணங்கள்
அமைந்து பட்டிருக்கலாம்
ஆனாலும் என்ன?
மலரும் நினைவுகள் -என்றும்
சுகமே
மனதின் நினைவுகளில் -நீங்கா
இடமே!

Wednesday, August 3, 2011

மனிதத் தேவை

சுவரை   நிமிர்த்திட  -இவள்
வளைகிறாள்-வாழ்வை
வளைக்கின்றாள்!

உறைவிடம்   உருவாக்கி
உணவு ,உடை    உண்டாக்குவாளா?
உயிர்  உருக்கி ,உழைப்பு   பெருக்கி
உயர்வு   பெறாவிடினும்
உலகின்  மாறாத  மனிதத்  தேவை
உணவு ,உடை ,உறைவிடம்
பெறுவாளா?

Saturday, July 16, 2011

கர்ம வீரர்


மனதில் மலர்ந்திட்ட மலர்களை
கவிமாலையாக்கி காணிக்கையாக்குகின்றேன்
கர்ம வீரனின் கமலபாதங்களிலே

தமிழகத்தின் வரலாற்றில் ஒரு முத்திரைச்சொல்
கர்ம வீரன்-ஒரு
கறுப்பு மனிதன் கர்மவீரன் ஆனகதை கேளுங்கள்
காமராசரே,நீர் பிறக்குமுன்பே விருது
கிடைத்து விட்டதே,உந்தன் மண்ணுக்கு!
நீ அங்கே அவதரிக்கப் போவதை
அறிந்தா?அல்லது அறிவிக்கவா?

இராசாசியின் எழுத்து,
அண்ணாவின் பேச்சு,
அம்மையின்ஆங்கில வளம்
கலைஞரின் தமிழ்ப்புலமை
இத்திறம் ஏதும் இல்லாது
எத்திறத்தில் நீ வென்றாய்?
காலங் கடந்து நின்றாய்?

மணம் புரிந்திடவில்லை-மக்களின்
மனம் புரிந்ந்திட்டாய்
மதிய உணவு தந்தாய்
மகத்தான தலைவனானாய்-மாணவரின்
கல்விக் கண்ணைத் திறந்தாய்
காலங்கடந்து நின்றாய்
அணுவிஞ்ஞானியின் ஆற்றலும்
பாரிஸ்டரின் பண்பு நலனும் கொண்ட
கறுப்பு காந்தியே,
பாரதம் போற்றும் தலைவனே,
சாதனை நாயகன் உன்னைச் சிலர்
சாதிச் சிறையில் அடைத்திட்டாலும்
மழைத்துளி பருகிய சக்கரவாகம் நீ
மக்களின் தலைவனல்லவா?

சிவகாமி மகனிடம் சேதி சொல்லச் சொல்லி
கவியரசு சொன்னவை
கொட்டிலிலே தோன்றிக் குவலயத்தில் பேரெடுத்து
இட்டமுடன் சேர்ந்தோர்க்கு இறைவனாய் தோற்றமுற்ற
ஏசுபிரான் மேற்றிசையில்!
இளைப்பிரான் கீழ்த்திசையில்!
சத்தியமே தெய்வம் சமத்துவமே வாழ்க்கையென
இத்தரையில் ஓர் நாள் இளவரசாய் வந்துதித்த
புத்தபிரான் நேபாளம்!புனித பிரான் விருதுநகர்!

மென்மையான தலைவனின் மேன்மை உரைக்க
இதைவிடச் சான்றும் வேண்டுமோ?
                                                                                        (மீள் பதிவு)