Friday, August 19, 2011

எல்லோர்க்கும் நன்றாம் பணிதல்

வள்ளுவம் உரைத்திடாத வழிமுறைகளே வாழ்க்கையில் இல்லை.தலைப்பாய் அமைந்து இருக்கும் இவ்வடியானது வாழ்வின் உயர் பண்பான பணிவு குறித்துச் சொல்லுவதாய் அமைகின்றது. இந்த அடி பற்றிச் சொல்லுகின்றது அடக்கமுடைமை என்ற அதிகாரம்.இந்த அதிகாரத்தின் முதல் குறளானது பணிவு என்பது ஒருவரைத் தேவருக்கு ஒப்பாக்கும் என்பதனை,
'அடக்கம் அமரருள் உய்க்கும்'என்கிறது.

மேலும் சான்றாண்மை என்ற அதிகாரம் கூறுவதாவது,
'ஆற்றுவார் ஆற்றல் பணிதல்'.அஃதாவது , திறமையாளரின் மிகப் பெரிய திறமை பணிந்து நடப்பது என்கின்றது.
செல்வமுடைக்கும் படையாக திரிகடுகம் சொல்கிறது.
''தாழ்வின்றிக் கொன்னே வெகுளி பெருக்கலும்''என்று.இஃது உணர்த்துவது அடக்கமில்லாமல் வீணாகக் கோபப் படுதல் செல்வத்தை அழிக்கும்.
இத்தகைய உயர் பண்பாகிய பணிவு நம்மிடம் இருந்தால் நாம் பேசுவன யாவும் இனிமையோடிருக்கும்.அதனையும் செந்நாப் புலவன் செப்புகின்றானே, 'இனியவை கூறலில்',
''சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்'' என்று
பணிவிருந்தால் பிறக்கும் சொற்கள் இனிமையோடு கூடியதாய் இருக்கும்.அவற்றைச் சொல்லுகின்றவர்க்கு இம்மை மட்டுமல்லாது,மறுமையிலும் கூட இன்பம் மட்டுமே விளையும்.
வாழ்வினில் வேண்டும் துணிவு
விலக்கிடல் வேண்டும் முனிவு
துணிவோடு சேர்ந்த கனிவு
இதற்கெலாம் வேண்டும் பணிவு.

Monday, August 15, 2011

சுதந்திரம்


தண்ணீர் விட்டா வளர்த்தோம் ?சர்வேசா
இப் பயிரைக் கண்ணீரால் காத்தோம்
கருகத் திருவுளமோ?
கதறினாயே பாரதியே
பலனில்லை இன்றும்
கருகும் உயிர்கள்
கறுப்புப் பண ஊழல்கள்
எங்கே போனது சுதந்திரம்?

எந்திரமாய் இயங்கும் உலகில்
தந்திரமாய்க் காரியம் செய்யினும்
மந்திரத்தால் மாங்காய் விழுமா?
சுதந்திரம் தான் சுகமே தரினும்
சூட்சுமமான சுமுகம் தருமா?

சுதந்திரத்திற்கான சூட்சுமம் காண
இயந்திர மனம் நிறுத்தி,
இதயத்தில் ஒளி ஏற்று-அந்த
ஒளியை வாழ்வின் வழியாய் தந்து

உயர் பண்பு,ஒழுக்கம் தந்து
மனித வாழ்வின்
துயர் துடைக்கும் மாண்புடைய பாரதம்

ஆன்ம ஒளி தனை ஏற்றி
மானுட வாழ்வின்
பான்மை உயர்த்திடும் பாரதம்

கலைகள் ,கல்வி யாவும் தந்து
மக்கள் வாழ்வில்
நிலை உயர்த்தியது பாரதம்

உலகம் உய்யவே
கலகம் தவிர்த்திட
உரைத்தது என்றும் பாரதம்
உரைப்பதொன்று,உறுவதொன்று
என்றிருந்தால்
உருப்படுமா நம் பாரதம்?

பாரதம் மட்டுமா?பாரோர் யாவரும்
பண்பில் சிறந்திட வேண்டும்
பண்படுத்துதல் நிலங்களுக்கு மட்டுமா?
உளங்களுக்குமே கேளீர்

உளம் உயர்த்த நலமே பெருகும்
நன்மைகள் யாவும் சாத்தியமே
சாத்தியம் இவையெல்லாம் சத்தியமென்பது
சுதந்திர வாழ்வின் சூட்சுமமே!