Saturday, March 31, 2012

முக்கண்ணனே!


                                             அரை மணித் தவமே
                                              அவஸ்தையாயிருக்கையிலே,
                                              ஆண்டு முழுதும் தவம்!

                                              அனுபவிக்கிறாயா ஆண்டவனே
                                               எங்களுடைய உடைமையை
                                               எடுத்துக் கொண்டு,
                                               முக் கண்ணனாய்!

மதிப்புக் கொடுங்கள்

                             கேட்டு வாங்கிட இது என்ன
                              கடைச் சரக்கா?
                             
                             
                                 
                                   ''எல்லோர்க்கும் நன்றாம் பணிதல்''
                                    பொய்யா மொழிப் புலவனின்
                                    பொன் மொழி.

                                    எல்லோரையும் பணிதல் என்பது
                                     ஏற்புடையதே என்றாலும்
                                    ஏற்போரின் செயல்பாடும் அதிலடங்கும்

                                     ஆனால்,
                                      முதுமை என்பது வாழ்வின்
                                       வழிகாட்டி,
                                     
                                      அன்றைக்கு ஆற்றலின் அரங்கம்
                                       இன்றைக்கு அனுபவச் சுரங்கம்
                                       அந்த ஆற்றலின் அரங்கு தந்த
                                       அனுபவங்களாலே தான்-நம்
                                       வாழ்க்கைப் பாதை வளமாகும்
                                       நலமாகும்.

Monday, March 26, 2012

நல்லதோர் வீணை செய்தே........

நல்லதோர் வீணை செய்தே -அதை
நலங் கெடப் புழுதியில் எறிந்து
விட்டாயே ! சிவ சக்தி
நீ தந்த சுடர் மிகு அறிவால் உலக
சூட்சுமம் உணர முடியவில்லையே!

மரபின் மைந்தன் சொன்னார்
சிறப்பான தலைமை உனக்கு
வாய்க்கப் பெறவில்லையென்றால்
அது துரதிர்ஷ்டமென்று!
பணிக்காலம் பலருக்கு
துரதிர்ஷ்டமே!

துரியோதன மனத்தின் விளைவா?
துர்மனத்தின் துன்பம்தரும் கலர்கண்ணாடியா?

மெத்தப் படித்த மேதாவித் தனத்தால்
மேலாண்மையை மேலாண்மை
செய்ய இயலவில்லை.

ஆண் தலைமை அரக்கத்தனமாய்,
பெண் தலைமையோ அசுரத் தனமாய்!

ஆசுவாசம் தேடி அடைக்கலமானேன்
வகுப்பறையில்!
எந்தன்
சுவாசத்திலே சுகந்தம்
மூச்சிலே உயிர்ப்பு
மலர்க்கூட்டம் எந்தன்
முன்னால்,
ஆஹா!
ஆசையாய்ப் பேசினேன் அதனிடத்தில்
அலுவலக அறையிலிருந்து அழைப்பாம்!
அய்ந்து நிமிடம் கூட ஆகவில்லை,
ஆறு மாதத்திற்கு முன் விட்டுப் போன கையெழுத்தாம்,
அரைகுறையாய் விட்டது தொடர்ந்தேன்
அடுத்த வகுப்புப் பிள்ளை வந்தாள்,
''அன்பரசியை அறிவியல் ஆசிரியை''கூப்பிடறாங்க,
''போ'' சொல்லிவிட்டுப் பாடத்துள் புக முயன்றேன்
''இழுப்பறையில் இங்கிலீஷ் நோட் இருக்கிறதாம்''
இளவரசி வந்து நின்றாள்
''இம்சை''என்றபடி கொடுத்துவிட்டு நிமிர்ந்தேன்
இழுத்தடித்த மணியின் ஒலியில்
இனிய சுவாசம் கரைந்தே போனது
இன்மலர் முகங்களும் உதிர்ந்தே போனது

சிவ சக்தீ!!
பாரதிக்குப் பகர்ந்தாயா பதிலினை?
பரவாயில்லை,எனக்குச் சொல்லிடு

இறுகிய மனத்துடனே இளம் பிள்ளைகளைப்
பார்க்கும் மனம் தந்திடு!

சுற்றியிருக்கும் குப்பைக்கு நடுவில்
சுற்றுச் சூழல் மேம்பாடு சொல்லும்
சூட்சுமம் சொல்லிடு!

இளகிய மனம் இரும்பாக்கு!
நலம் கெடப் புழுதியில் எறிந்து விட்டாயே!