Friday, July 9, 2010

இனியொரு விதி செய்வோம்

தரம் உயர்த்த தவறுவது யார்?தினமணியில் திரு.ப.செ.சங்கரநாரயணன் அவர்களின் கட்டுரை படித்தேன்.அது குறித்து எனது கருத்து,
தரம் உயராமல் இருப்பதற்கு நான் உணரும் காரணம் யாதெனில்,பிள்ளைகள் அனைவரும் ஒரே மாதிரியான திறன் உடையவர்கள் இல்லை.வேறுபட்ட திறன் கொண்ட இந்த மாணவர்களில் ஏற்புத்திறன் குறையுடைய மாணவர்களை அதே வகுப்பில் நிறுத்தி,மீண்டும் ஓராண்டு பயிலச் செய்வது அவர்களுக்கான சிறந்த பயிற்சியாகிருக்குமே ஒழிய அதைத் தோல்வி என்று கருத வேண்டியதுஇல்லை.அதோடு சிறந்த திறன் கொண்டவர்க்கு முந்தைய காலகட்டத்தைப் போல இரட்டைத்தேர்ச்சி(double promotion)வழங்குவதில்லை.90க்கும் மேற்பட்ட விழுக்காட்டினைப் பெற்றவர்கள் இருக்கும் அதே வகுப்பில் எழுத தெரியாத,வாசிக்கத் தெரியாத ,அதற்காக ஒரு சிறிதும் முயற்சியே செய்யாத மாணவர்களும் இருக்கிறார்கள்.100% தேர்ச்சி என்ற பெயரிலே முயற்சியே ஒரு சிறிதும் இல்லாமல் மூலையில் இருக்கும் மாணவர்களையும் அடுத்த வகுப்பிற்கு அனுப்புதல் என்பது அபத்தம்.ஏற்புத்திறன் குறையுடைய மாணவர்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தலாமே ஒழிய மற்றவர்களைக் கவனிக்காமல் விட்டுவிட முடியாது.எல்லோருக்கும் சொல்லித் தருவதற்குத் தான் ஆசிரியரே ஒழிய பின் தங்கியவர்களுக்கான பயிற்சியை மட்டுமே கொடுத்துக் கொண்டிருந்தால் திறமையான மாணவர்களின் தரம் குறைய வாய்ப்பு இருக்கிறது.

1;40 சட்டம் எல்லாம் கிராமத்துப் பள்ளிகளில் செல்லுபடியாகாது.80பேர் இருக்கும் வகுப்பில் கூடுதலான 40பேரைக் கவனிப்பதும் அதே ஆசிரியர் தானே?நாணயத்தின் ஒரு பக்கம் மட்டுமே பலரால் பார்க்கப்படுகிறது.
கல்வி முறையில் வியத்தகு மாற்றங்கள் நிகழ்வது மறுக்க முடியாத உண்மை.ஆனால் எழுத தெரியாத பிள்ளைகளை அடுத்தவகுப்புக்கு ஏற்ற வேண்டும்,படிக்கத் தெரியாதவர்களுக்கும் பாஸ் போட வேண்டும் போன்ற சிற்சிலசட்டங்களில் மாற்றம் ஏற்பட்டாலொழிய ஏற்றம் ஏற்பட வழியில்லை.தரம் உயர்த்துவதற்குரிய தகுதிப்பாடுகளை உயர்த்திட சட்டங்களும் வழி வகுத்துக் கொடுக்க வேண்டும்.

Thursday, July 8, 2010

ஐம்பது

ஆடி அடங்கும் வாழ்வினிலே-பண்
பாடி முடித்திட்ட பாதி நிலை

இன்பமும்,துன்பமும் ஐம்பதைம்பதாய்ப்
பார்த்து அனுபவம் சேர்த்த அபூர்வ நிலை

முன் நிலை நினைத்து மனம் ஏங்கும்
பின் நிலை நினைத்து மனம் பயம் தாங்கும்

செக்கு மாடு வாழ்வானாலும் தேசம் பல
சென்று கண்ட வாழ்வானாலும்

சேகரித்த அனுபவம் சிந்தையிலே பல கோடி
மலரும் நினைவுகளில் மனம் மூழ்கிடினும்
மரண பயமும் எட்டிப் பார்க்கும்

கலக்கம் கழற்றி வாழும்
கலையினால் என்றும் களிப்பே!

ஈகை

இது,
இதயச் சுரப்பாயின்
இன்பம் சுரக்கும்
அன்பு பிறக்கும்
அவனி செழிக்கும்
ஆற்றல் தழைக்கும்
உவகை நிறையும்
உன்னதம் பெருகும்
கவலை மறக்கும்
காசினி சிறக்கும்