Friday, June 25, 2010

வீட்டுக்கொரு மனிதம் வளர்ப்போம்

காசு மட்டிலும் தான்
காசினியில் பிரதானமாகிடும்
கவலை தோய்ந்த உலகமிது
கணிப் பொறியினாலே காரியமாற்றி
கருணை மறந்த உலகமிது

நூறாண்டு மரத்தை வெட்டிவிட்டு
நூதனமாய்க் கன்று நடும்
நுண்ணறிவு மிக்க உலகமிது

அன்பு என்பதற்கு அகிலத்தில் விலையில்லை
அதுவும் விலை பேசப்படுகிறது
முதியோர் காப்பகங்களாய்
குழந்தை பராமரிப்பகங்களாய்

மரம் வளர்த்திட்டு,மழை காப்பது போல
மனிதம் வளர்த்து நல்மனதினைக் காண்போம்
உலகு சுற்றி வரலாம்-அணு
உலைக் களங்கள் ஆக்கலாம்
அகிலத்தையே ஆளலாம்-ஆடியே களிக்கலாம்

பக்கத்து வீடு பற்றி எரிந்திடினும்
பாராது இருந்து விடும் பண்பு?
அடுத்தவரின் அழுகையிலே
ஆர்ப்பரிக்கும் மனது?

முன்னேற்றம் கண்டிட பிறர்
முதுகில் ஏறிடுவது?
முகம் காணும் போது சிரித்து
முதுகின் பின் இகழ்வது?

அப்பா!
மனிதம் தொலைந்து கொண்டிருக்கிறது
புனிதம் கூட வேண்டாமய்யா,
விதை இருந்தால் தானே விருட்சம்?
தொலைந்த்தைத் தேடுவோம் முதலில்
பின் விதைத்திடுவோம்
அன்பு விருட்சம் வளர்ப்போம்
அது,
ஆல் போல் தழைக்கட்டும்
அந்நிழலிலே அகிலமே
சுகம் கண்டு களிக்கட்டும்.

Thursday, June 24, 2010

பூமியில் நேராக வாழ்பவர் யாவரும்
சாமிக்கு நிகர் இல்லையா?
-கண்ணதாசன்

உலக சமாதானம்

பழங்காலத்தில் இருந்தே
பாரிலே இருந்த்து
போரிடும் நிலை-இதனை
வேரோடு வீழ்த்துவோம்

கல்வி நிலை வளர்ந்து
கலாச்சாரத்தில் உயர்ந்து
காலம் பல கடந்தும்
கற்கால மனிதராயிருப்பதோ?

அல்லவை தவிர்ப்போம்
ஆவோம் நன்மக்களாய்.

Wednesday, June 23, 2010

இஸ்திரிப் பெட்டி

ஆடைச்சுருக்கங்கள்
நீக்கப்படுவதுன்னாலே,
அகச்சுருக்கங்களை
நீக்கிடுவதற்கு?


சவப்பெட்டி
ஆட்டம் முடிந்து
அடங்கிட்ட நிலையில்
தனியாய் படுத்து
தவம் செய்யும் பெட்டி.

பெட்டிகள்

வாக்குப் பெட்டி

வாக்குகள் அளித்து
வாழ்வு அளிக்கிறோம்
நம் மீது பலப்பல
தாக்குதல் நடத்திடவே,

பணப் பெட்டி

சிலப்பல முதலாளிகளுக்குச்
சொந்தமான இதனை
பலப்பல பாடுகள் பட்டாலும்-பிறர்
பார்த்திடக் கூட முடியாதே.

Tuesday, June 22, 2010

நிறை மொழி மாந்தர் ஆணையிற் கிளந்த
மறை மொழி தானே மந்திரம் என்ப
-தொல்காப்பியம்
கவிதை
மனதிலே கருக்கொண்டு
மழலையாய் மலர்ந்திட்டு
மகிழ்வு தருகிறாய்-மனதில்
மாண்பு சேர்க்கிறாய்
மங்காத பொலிவோடு-மனதில்
மணம் சேர்க்கிறாய்

எண்ணச் சிதறல்கள்
இதயப் பையினில்
வண்ணம் பெற்றிட்டு
வந்திடும் வரம்
பண்ணென மலரும்
பயனுறு கவிதை