Friday, August 12, 2011

புதுக் கவிதை

‘’ இனியொரு விதி செய்வோம்’’

செய்தாயிற்று,

இலக்கணம் வகுத்து

இலக்கியம் படைப்போம்

படைத்தாயிற்று.

படைத்த இலக்கியம்

செய்த விதி

பிழையென்றானது.

இலக்கண மரபு மீறல் ,

பிழையென்ற கொள்ளலாகாது

இலக்கியமில்லையென்றும்

தள்ளலாகாது,

புதுக்கவிதை எனவும்

புரிந்து கொள்ளலாம்.

Thursday, August 11, 2011

வளைதல்


வளைந்தால் மட்டுமே வாழ்வா ?
வசதிக்காக வளைவது என்பதும்
வன்முறை ஆகாதா?

தலையே இல்லா உடலை நாமும்
என்னவென்று சொல்வோம்?
புதுத்தலை பொருத்தி இயங்கும் வாழ்வு
புனரமைக்கப் படுமா?

மூளை இட்டிடும் கட்டளையால் தான்
முழு உடலும் இயங்கும்
மூளையின் கட்டளை தவறென்றானால்
முறையற்றே மயங்கும்.

மயங்கிய தன்மையாயிருந்தாலும் கூட
இயக்கம் என்பதிருக்கும்
இயக்கம் என்பது இருப்பதனாலே
இளக்கம் வந்திடுமா?

இளக்கமில்லா இறுக்கமென்பது
இயந்திரமாகாதா?

மயக்கமும்,இறுக்கமும் கொண்ட மனது
மதி கெட்டே மாயும்
மதி கெட்டே மயங்கிய மனது
சதி மட்டும் புரியும்

விதியால் விளக்கிட முடியாததற்கு
விலக்கம் ஒன்றே தீர்வு.

Sunday, August 7, 2011

நட்பு

பழகிய நட்பு எவன் செய்யும் கெழுதகைமை
செய்து ஆங்கு அமையாக்கடை?
நட்பு,
அந்த அழகிய வார்த்தை
தந்த அகர வரிசையில்
மற்றொரு பரிமாணம்
இந்த நட்பு,
குறிஞ்சி மலர் தான்
ஆம்! இது சற்று வித்தியாசமானது
பன்னிரு ஆண்டுக்கொரு முறை
மலர்ந்தது அல்ல,
பன்னிரண்டு ஆண்டாய்
மலர்ந்திருந்தது.
அனிச்சமாய் சில தருணங்கள்
அமைந்து பட்டிருக்கலாம்
ஆனாலும் என்ன?
மலரும் நினைவுகள் -என்றும்
சுகமே
மனதின் நினைவுகளில் -நீங்கா
இடமே!