Saturday, October 9, 2010

வாழ்வின் வஞ்சம்




முதல்  பாட வேளை.தமிழ்  வகுப்பு.''அன்ன  யாவினும்  புண்ணியம்  கோடி ,ஆங்கோர்  ஏழைக்கு  எழுத்தறிவித்தல்''.நேற்றைக்கு  கரும்பலகையில்  எழுதியது  இன்னும்  அழிக்கப் படாமலேயே  இருந்த்து.எட்டாம்  வகுப்பில்  நுழைந்த  ஆசிரியை  மகேஸ்வரி மாணவர்களின்  பெயர்ப்பட்டியலை  வாசித்து வருகையினைப்  பதிவு  செய்தார்.
                                                நசீர் அகமது  இன்றைக்கும்  வரவில்லை.ஆசிரியை  குமரனை  நோக்கி , ''குமரா! நீ  நசீரின்  பக்கத்து  வீட்டில் தானே  இருக்கே.அவன் வராத்தற்கான  காரணம்  தெரியாதா?ஒரு வாரமாச்சே  அவன்  வந்து.ஏனென்று காரணம்  தெரிந்து  கொண்டு  வா'' என்று  சொல்லி விட்டு  பாடத்தை ஆரம்பித்தார்.
                                            பாடத்தை  முடித்து விட்டு  ஆசிரியர்களின்  ஓய்வறைக்கு
வந்த மகேஸ்வரி  புஷ்பா  டீச்சரைப்  பார்த்துச்  சொன்னார் ,''எட்டாம்  வகுப்பில் இருக்கும்  நசீர்  ஒரு  வாரமா  வரலை.நீங்களும் அந்த  வகுப்பில் கணிதம்  எடுக்கறீங்க.உங்களுக்கும்  தெரிந்திருக்கும்.ஏனென்றால் அவன் மிக நன்றாகப் படிக்கும்  மாணவனாயிற்றே.புஷ்பா ,''ஆமா,நானும்  கவனித்தேன்.காரணம் தெரியலே.உடம்பு சரியில்லையோ  என்னவோ?என்றார்கள்.
                                                        மகேஸ்வரிக்கு  அவனுக்கு  என்னவாகியிருக்குமோ?ஏன்  வரவில்லை? என்ற  எண்ணமே  மேலோங்கியிருந்த்து.அடுத்த நாள்  வகுப்பினுள் நுழைந்தவுடனே  குமரனைப்  பார்த்து,''என்ன  குமரா?நசீரைப்  பார்த்து விட்டு வந்தாயா?என்ன சொன்னான் ,உடம்பு  சரியில்லையா? என்று   கேட்டார். ''இனி மேல்  அவன்  வரமாட்டானாம்.தோல் தொழிற் சாலைக்கு வேலைக்குப் போகிறானாம்''என்றான் குமரன்.அவன் சொன்ன  பதிலால்  வருத்தமுற்று ,''நாளை  அவனைக்  கண்டிப்பாக  பெற்றோருடன்  வரச் சொல் ''என்றார்  குமரனை நோக்கி.
                                                         மறுநாள்  மூன்றாவது  பாடவேளையின் போது  ஏழாம் வகுப்பில்  தமிழ்  எடுத்துக் கொண்டிருந்தார் மகேஸ்வரி.குமரன்  நடுத்தர வயதுப் பெண் ஒருவருடன்  வந்து  கொண்டிருந்தான்.''டீச்சர் ,இவங்க  நசீரின்  அம்மா''என்றான்  குமரன. சொல்லி விட்டு  அவன் தன்  வகுப்பறை  நோக்கி  ஓடினான்.
                                                        மகேஸ்வரி  நசீரின்  அம்மாவைப்  பார்த்து  பள்ளியில்  புத்தகமும்,கட்டணமும்  இலவசம்.சீருடை,பேனா,பென்சிலுக்கான  செலவுகளை  நாங்கள்  ஏற்றுக் கொள்கிறோம்.நீங்கள்  அவனைப்  பள்ளிக்கு  அனுப்புங்கள்  என்றார். உடனே  நசீரின் அம்மா ''இவன் வாப்பா எங்களை  விட்டுவிட்டுப்  போய் விட்டார்.வீட்டில்  நாலு  ஜீவன்கள்  இருக்கோம்.வீட்டுச் செலவுக்கு என்னம்மா  செய்வது? இந்தக் கேள்விக்கு மகேஸ்வரியிடம்  விடையில்லை.
                                                                மாலை  பள்ளி  விட்டதும்  வீடு  செல்வதற்காக  வழக்கமாக  வரும்  ஆட்டோ  பள்ளி  வாயிலின்  முன்  வந்து  நின்றது.இத்தனை  நாளும்  கவனித்துப் பார்த்த்தில்லை.இன்று  கண்ணில் பட்ட  அந்த  வாசகம்  மனதில்  வலியை  ஏற்படுத்தியது. ''குழந்தைத் தொழிலை  அனுமதியோம் ''.

2 comments:

S.RAJAVEL said...

THE THEME IS VERY NICE. IF THE PARENTS THINK OF TEMPERORY LIGHT, HIS FUTURE WILL BE PERMANENT DARK.

Murugeswari Rajavel said...

Thank u .Ur comment is also so nice.